தென்காசி மாவட்டம் சிவந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பங்கஜவல்லி (69). ஓய்வு பெற்ற ஆசிரியையான இவரது வீட்டில் கடந்த 2019-ம் ஆண்டு 16 பவுன் தங்கச் சங்கிலி காணாமல்போனது. இது குறித்து அவர் தென்காசி போலீசில் புகார் செய்தார். போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த வழக்கில் துப்பு துலங்காமல் இருந்தது.
இந்த நிலையில், பங்கஜவல்லி செல்போனில் அவர் வீட்டில் வேலை பார்த்த ரெட்டியார்பட்டி பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் மனைவி ஈஸ்வரி (40) என்பவரின் ஸ்டேட்டஸில் தனது வீட்டில் திருட்டு போன நகை இருப்பதை பார்த்து உள்ளார். ஈஸ்வரி அதனை தனது கழுத்தில் அணிந்து செல்ஃபி எடுத்து பதிவு செய்துள்ளார்.
இது குறித்து தென்காசி போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்தார். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் செல்வி, பெண் போலீசார் தாமரை, மலர்கொடி ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி ஈஸ்வரியை கைது செய்தனர். அவரிடம் கேட்டபோது, அந்த நகையை திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து சுமார் 4½ லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகையை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் ஈஸ்வரி 6 மாதத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் திடீரென வேலையில் இருந்து நின்று விட்டார். அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அவர் எடுக்கவில்லை. கடந்த 2019-ம் ஆண்டு அவர் வேலையில் இருந்து நின்ற பிறகு சில நாட்கள் கழித்து பார்த்தபோது பங்கஜவல்லியின் வீட்டில் இருந்த நகையை காணவில்லை.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஈஸ்வரி ஒரு திருமண வீட்டிற்கு சென்று விட்டு அவரது உருவத்தை செல்போனில் செல்ஃபி எடுத்துள்ளார. அப்போது அவர் பங்கஜவல்லி வீட்டில் திருடிய நகையை கழுத்தில் அணிந்து இருந்தார். அந்தப் படத்தை செல்போன் ஸ்டேட்டஸில் ஈஸ்வரி வைத்துள்ளார். இதைப் பார்த்த பங்கஜவல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.