புரட்டாசி பெருமாளுக்கு உகந்த மாதமாகும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படும். அதன்படி புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமையான இன்று (8-ந்தேதி) திருப்பதி ஏழுமலையானை வழிபட ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்தனர். திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி கோவில் அருகே கோகர்ப்பம் அணை வரை 6 கிலோ மீட்டா் தூரத்துக்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
நாராயணகிரி தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து ஷெட்டுகளில் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர். இலவச தரிசனத்தில் சென்று ஏழுமலையானை வழிபட 48 மணிநேரம் ஆகிறது. தரிசன வரிசையில் செல்லும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி திருமலையில் பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் நிதானத்துடன் வரிசையில் காத்திருக்க வேண்டும். புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமைக்கு பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க வருகின்றனர். இதனால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 48 மணி நேரம் ஆகிறது.
நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து இரவு 8 மணிவரை 44 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.ெவளியில் காத்திருக்கும் பக்தர்கள் கோவிலுக்குள் நுழையும் வரை பொறுமையாக இருக்க வேண்டும். பக்தர்கள் திருமலையில் உள்ள அமைனிட்டி காம்ப்ளக்சில் தங்கி ஓய்வெடுக்கலாம். அனைவரும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.