திருப்பதி : புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க லட்ச கணக்கில் பக்தர்கள் குவிந்து இருக்கிறார்கள். இதனால், கட்டணமில்ல தரிசனத்திற்கு 48 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. திருப்பது ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக கடந்த 4 நாட்களாக பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்று புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமை என்பதால் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 32 அறைகளும் நிரம்பிய நிலையில் நாராயண தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வரிசைகளும் நிரம்பியதால் தற்பொழுது பாபவிநாசம் சாலையில் உள்ள நீண்ட வரிசையில் 5கி.மீ. தூரத்திற்கு பக்தர்கள் காத்து இருக்கின்றனர். இதன் காரணமாக கட்டணமில்லா தரிசனத்தில் சாமி தரிசனம் செய்வதற்கு 48 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைன்னில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு 6 மணி நேரமும், கல்யாண உற்சவம், முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்கள் அடிப்படையில் வருகின்ற பக்தர்களுக்கு 3 மணி நேரமும் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
ஏழுமலையான் கோவிலுக்கு 1 மணி நேரத்திற்கு 4,000 முத்த 5,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான வசதிகள் உள்ளது. இந்நிலையில், பக்தர்களில் வருகை இரண்டு மடங்காக உள்ளதால் காத்திருப்பு நேரம் அதிகரித்துள்ளது. எனவே, பக்தர்கள் பொறுமையுடன் காத்திருந்து தேவஸ்தானத்துக்கு ஒத்துழைப்பு அளித்து சாமி தரிசனம் செய்து செல்ல வேண்டும் எனவும், பக்தர்களுக்காக 2 மணி நேரத்திற்கு ஒரு முறை பால் உள்ளிட்ட அன்ன பிரசாதங்கள் வரிசையில் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம் எனவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.