திருவண்ணாமலை : திருவண்ணாமலை புதிய பைபாஸ் சாலையில் தீபம் நகரில் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாக மூடப்பட்டுள்ள மேம்பாலத்தை, பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். திருவண்ணாமலை பிரசித்தி பெற்ற ஆன்மிக நகரம். எனவே, ஏராளமான பக்தர்கள் தினமும் இங்கு வந்து செல்கின்றனர்.
குறிப்பாக, பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வௌி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கானோர் திருவண்ணாமலைக்கு வருகின்றனர். எனவே, திருவண்ணாமலை நகருக்குள் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கவும், போக்குவரத்துக்கு மாற்று ஏற்பாடாகவும் நகரையொட்டி புதிய பைபாஸ் சாலை அமைக்கப்படுகிறது. முழு வட்ட வடிவில் அமைக்கப்படும் இந்த சாலை முழுமையானால், நகருக்குள் போக்குவரத்து சிக்கலும், நெரிசலும் முழுமையாக கட்டுப்படுத்தப்படும்.
ஆனால், தற்போது வேலூர் சாலையில் தீபம் நகர் தொடங்கி, அரசு மருத்துவக் கல்லூரி வழியாக அவலூர்பேட்டை சாலை, திண்டிவனம் சாலை, வேட்டவலம் சாலை, திருக்கோவிலூர் சாலை வரை புதிய பைபாஸ் சாலை முழுமையாக அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. திருக்கோவிலூர் சாலை தொடங்கி, மணலூர்பேட்டை சாலை, தண்டராம்பட்டு சாலை, செங்கம் சாலை வரை சாலை அமைக்கும் பணி பெருமளவில் முடிக்கப்பட்டுள்ளன.
நிலுவையில் உள்ள பணிகள் முடிந்ததும் அந்த வழித்தடமும் பயன்பாட்டுக்கு வரும். மேலும், செங்கம் சாலையில் தொடங்கி, காஞ்சிசாலை வழியாக வேலூர் தீபம் நகர் வரை பைபாஸ் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்த பணி முடிந்ததும், சாலை அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை புதிய பைபாஸ் சாலையின் தொடக்கப்பகுதியான தீபம் நகர் அருகே புதியதாக அமைக்கப்பட்ட மேம்பாலம் பணி முழுமையடைந்து, பல மாதங்கள் கடந்துவிட்டன. ஆனாலும், இன்னும் பயன்பாட்டுக்கு திறக்கவில்லை. மேம்பாலத்தை பயன்படுத்த முடியாதபடி, இரண்டு பகுதிகளிலும் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வாகன போக்குவரத்து இல்லாமல் மூடப்பட்டுள்ள மேம்பாலம், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியிருக்கிறது. மேம்பாலத்தை திறந்தவெளி மதுக்கூடமாக மாற்றிவிட்டனர். மேலும், மேம்பாலம் திறக்காததால், பாலத்தின் கீழே வாகனங்கள் கடந்து செல்கின்றனர்.
குறிப்பாக, பைபாஸ் சாலையில் பயணிக்க வேண்டிய வாகனங்கள் பாலத்தின் மீது செல்லாமல், பாலத்தின் கீழ் உள்ள சாலையில் செல்கின்றன. அதேபோல் திருவண்ணாமலை நகருக்குள் வர வேண்டிய வாகனங்களும் பாலத்தின் கீழ் உள்ள சாலையில் கடந்து செல்கின்றன. அதனால், விபத்துக்களுக்கான அச்சம் ஏற்படுகிறது.
எனவே, கட்டி முடித்தும் பயன்பாடின்றி மூடப்பட்டுள்ள மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும். வாகன போக்குவரத்து பாலத்தின் மீது அனுமதிக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக, இனி வரும் மாதங்களில் தொடர்ந்து பண்டிகை மற்றும் விழாக்கள் அமைந்துள்ளன. எனவே, திருவண்ணாமலைக்கும் வரும் வாகனங்களும், திருவண்ணாமலையை கடந்து செல்லும் வெளியூர் வாகனங்கள் அதிக அளவில் இருக்கும்.
அதனால், மேம்பாலம் பகுதியில் போக்குவரத்து வழிகாட்டி மற்றும் விபத்து எச்சரிக்கை பலகைகளை முறையாக அமைத்து, தீபாவளி பண்டிகைக்கு முன்பாக புதிய மேம்பாலத்தை திறக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.