திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகில் உள்ள கொல்ல குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்வர்கள் மணி, எல்லம்மாள் தம்பதியினர். கூலித் தொழிலாளியான மணிக்கு எட்டு வயதில் ஒரு மகன் இருக்கின்றான். இந்தச் சிறுவன் நேற்று இரவு வழக்கம்போல வீட்டில் தூங்கிக்கொண்டிருந்திருக்கிறான்.
அப்போது வீட்டுக்குள் நுழைந்த கண்ணாடி விரியன் மற்றும் கட்டுவிரியன் பாம்புகள் சிறுவனைக் கடித்துவிட்டு அவன் மேலே படுத்திருந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணி, அந்த பாம்புகளை அடித்திருக்கிறார். பின்னர் சிறுவனையும், பாம்புகளையும் தூக்கிக்கொண்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார்.
அங்குச் சிறுவனுக்கு முதலுதவி வழங்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காகத் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பியிருக்கின்றனர். இரண்டு பாம்பில் எந்த பாம்பு கடித்தது என்று தெரியாத காரணத்தினால், அங்கும் இரண்டு பாம்புகளையும் எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார்.
சிறுவனின் தந்தை மருத்துவமனைக்குப் பாம்புகளுடன் வந்ததால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிறுவனுக்குக் குழந்தைகள் நலப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.