நடிகர் போண்டா மணியிடம் இலங்கை தமிழர் என கூறி பண மோசடி செய்த நபர் கைது.
அவர் எப்படியெல்லாம் பழகி ஏமாற்றினார் என்பது குறித்து பேசிய போண்டா மணி.
தன்னை இலங்கைத்தமிழர் என கூறி கொண்டு நடிகர் போண்டா மணியிடம் பண மோசடி செய்த இளைஞர் கைதான நிலையில் அவர் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை தமிழரான போண்டா மணி தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக உள்ளார்.
கடந்த சில மாதங்களாக 2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் வந்ததோடு தமிழக அரசு உதவுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் டிஸ்சார்ஜ் ஆன போண்டா மணி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவர் சிகிச்சையில் இருந்த போது அங்கு வந்த ராஜேஷ் பிரித்தீவ் (34) என்பவர் உடல் நலம் விசாரிப்பது போல் நடிகர் போண்டா மணியிடம் பழகி சிறு உதவிகளை செய்து வந்தார்.
போண்டா மணி வீடு திரும்பியதும் அவருடன் ராஜேஷ் பிரித்தீவ்வும் உடன் வந்தார்.
இதையடுத்து போண்டா மணியின் மனைவி மாதவி, தனது கணவரின் ஏ.டி.எம். கார்டை ராஜேஷ் பிரித்தீவ்விடம் கொடுத்து, மருந்து வாங்கி வருமாறு கூறினார்.
ஆனால் ராஜேஷ் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 941 மதிப்புள்ள நகை வாங்கியதாக மாதவியின் செல்போனுக்கு குறுந்தகவல் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதன்பிறகு ஏ.டி.எம். கார்டுடன் ராஜேஷ் பிரித்தீவ்வும் தலைமறைவாகி விட்டார்.
இது குறித்த மாதவியின் புகாரையடுத்து பொலிசார் ராஜேஷை கைது செய்தனர்.
இது தொடர்பில் பேசிய போண்டா மணி, கடந்த 23ஆம் திகதி மருத்துவமனைக்கு வந்த ஒருவர், நான் இலங்கை தமிழன், உங்களுடைய சொந்தம்தான்.
இன்ஸ்பெக்டர் பணியில் உள்ளேன் என சொன்னான். அந்த நேரத்தில் அவன் யாரு, என்னவென்று என யோசிக்க தோன்றவில்லை. என் மனைவியிடமும், மகளிடமும் மிகவும் நன்றாக பேசியிருக்கான்.
அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்திருக்கான். அவங்களும் நம்பி பேசிட்டு இருந்துருக்காங்க.
பின்னர் நான் டிஸ்சார்ஜ் ஆனவுடன் என் மனைவியிடம் ஏடிஎம் கார்டை வாங்கி கொண்டு மோசடி செய்துள்ளான்.
நானே திருடுவது போன்றெல்லாம் படங்களில் நடித்துள்ளேன். ஆனால் இப்போது நானே ஏமாந்துவிட்டேன் என கூறியுள்ளார்.