திருச்சி ஆண்டாள் வீதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் (CARE ACADEMY) PG – TRB தேர்வில் இன்று அரசு பணி ஏற்க இருக்கும் 85 ஆசிரியர்கள் மற்றும் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் இஸ்ரோ இயக்குனர் மற்றும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்றார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மயில்சாமி அண்ணாதுரை, “மேற்படிப்பு என்பதை தாண்டி வேலைக்கு கூட போட்டி தேர்வு என்பது அவசியமான ஒன்றாக உள்ளது. எனவே அதற்கு தேவையான பயிற்சிகளையும் முன்னெடுப்புகளையும் எடுத்துச் சென்றால்தான் இந்திய அளவில் நம் தமிழக மாணவர்கள் முன்னேற முடியும்.” என்றார்.
சந்திரனின் மேற்பரப்பில் சோடியம் அதிகமாக உள்ளது என ஆய்வுகள் வெளியாகி வருகிறது என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர், “அறிவியல் ரீதியாக நிலவு எப்படி உருவானது என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்கின்றனர். நிலவு பூமியிலிருந்து பிரிந்து உருவானதா? அல்லது வேறு எப்படி உருவானது என்று ஆய்வு செய்யும் போது ஒவ்வொரு கிரகங்களிலும் என்ன அதிகமாக உள்ளது என்று ஆய்வு செய்கிறார்கள். 1972இல் மனிதன் விண்வெளிக்கு சென்று வந்தான் அதற்கு பின்பாக தொடர்ந்து உலக அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. உலக நாடுகள் அதைப்பற்றி யோசிக்கிறது என்றால் அதற்கு காரணம் சந்திரயான் தான். நிலவில் நீர் உள்ளது என்பதனை கண்டுபிடித்திருக்கிறோம் வரும் காலத்தில் மனிதன் அங்கு சென்றால் எப்படி அதை பயன்படுத்திக் கொள்ள முடியும் இன்னும் சொல்ல போனால் விவசாயம் கூட செய்ய முடியுமா என்றெல்லாம் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. நிலவில் நீர் இருப்பதை 100 கி.மீ மீட்டர் தொலைவில் இருந்து சந்திரயான் -2 வாயிலாக பார்த்தோம், அடுத்ததாக சந்திரயான் மூன்றின் வாயிலாக தரையில் இறங்கி ஆய்வு செய்யும் வகையில் நாம் தொழில்நுட்ப ரீதியாக திட்டமிட வேண்டும்.” என்றார்.
நிலவில் நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது மிக முக்கியமான கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது என குறிப்பிட்ட மயில்சாமி அண்ணாதுரை. இதன் மூலம் தற்காலிகமாக செயல்படும் விண்வெளி மையத்தை நிலவில் நிரந்தரமாக அமைக்க முடியும். மனிதர்கள் அங்கேயே குடியேறி, விவசாயமும் செய்ய முடியும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங் கால் பதித்தது உண்மை கடந்த 1952ம் ஆம் ஆண்டு நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்டோர் கால் பதித்தது உண்மை. இதன்மூலம், நிலவுக்கு, விண்வெளிக்கு மனிதர்கள் சென்று வர முடியும் என்பது நிரூபிக்கப்பட்டது. தற்போதைய நவீன தொழில்நுட்ப காலத்தில் விண்வெளியில் பல மாதங்கள் தங்கி இருப்பதை பார்க்கலாம். அதுபோல, நிலவிலும் குடியேறும் காலம் விரைவில் வரும். 50 ஆண்டுக்கு முன்பாக விண்வெளிக்கு மனிதன் சென்றபோது போட்டிக்காக சென்றான் ஆனால் தற்போது போட்டிகளுக்காக பயணிப்பதில்லை பல்வேறு ஆய்வுகளுக்காக பயணிக்கிறான்.” என்றார்.
மனித கழிவுகளை மனிதனே அள்ளும் முறையை தடுத்து அதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் வலியுறுத்துகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த மயில்சாமி அண்ணாதுரை, “கண்டிப்பாக அதற்கான தொழில் நுட்பங்கள் இருக்கிறது. ஆனால் அதைத் தாண்டி மனிதன் அதை செய்கிறான் என்றால் அது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. தொழில்நுட்பம் இருந்தும் மனிதன் அதை செய்கிறான் என்றால் அது தவறான காரியம்தான்.” என்றார்.
நாட்டு மக்கள் எல்லாவற்றையும் இன்று தெரிந்து கொள்கிறார்கள் தொலைக்காட்சியின் வாயிலாக என்றால் அதற்கு காரணம் செயற்கைக்கோள். அதற்கு காரணம் அறிவியல் வளர்ச்சி. உலகில் தானியங்கி வங்கிகள் அதிகம் செயல்படும் நாடு இந்தியா, உலகில் அதிகமான எதிரிகள் சுற்றி உள்ள நாடு இந்தியா எனவே அவர்களை கண்காணிக்கவும் செயற்கைக்கோள் தான் பயன்படுகிறது என்றும் அவர் கூறினார்.
5G சேவையை பற்றி பேசிய மயில்சாமி அண்ணாதுரை, “கடந்த காலங்களில் அதுவும் கொரோனா காலங்களில் கல்வியை வீட்டுக்கே கொண்டு வந்து படித்தோம், மருத்துவமனைக்கு செல்லாமல் மருத்துவரை வீட்டிலேயே பார்த்தோம். தற்போது அதையும் தாண்டி 5G சேவையில் அறுவை சிகிச்சை செய்யக்கூடிய வாய்ப்பு உருவாகி உள்ளது. மேலும் தொழிற்சாலைகளில் ஆள் இல்லாமல் இயந்திரங்கள் இயக்கம் நடைபெறும் அளவில் தொழில்நுட்பம் தற்போது வளர்ச்சி அடைந்து வருகிறது.” என்றார்.