தேனி மாவட்ட ம.தி.மு.க சார்பில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படமான `மாமனிதன் வைகோ’ படம் திரையிடப்பட்டது. தேனி பழனிசெட்டிபட்டியில் உள்ள தியேட்டரில் திரையிடப்பட்ட ஆவணப்படத்தை ம.தி.மு.க தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ இன்று ம.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகளுடன் பார்த்தார்.
காலை 10 மணிக்கு படம் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. துரை வைகோ வருவதற்கு தாமதமானதால், நிர்வாகிகள் தியேட்டருக்குள் காத்திருந்தனர். அப்போது ம.தி.மு.க தேனி மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன் கட்சியினருக்கு டிக்கெட் விநியோகம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் முன்னாள் ஒன்றியச் செயலாளர் சிவா டிக்கெட் கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிவா மாவட்டச் செயலாளரை அடிக்கப் பாய்ந்தார். அவரை நிர்வாகிகள் தடுத்து அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு வந்த துரை வைகோ, இருவரையும் சமாதானப்படுத்தி தியேட்டருக்குள் அழைத்துச் சென்றார்.
ஆவணப்படம் முடிந்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ, “மாமனிதன் வைகோ ஆவணப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த மாத இறுதிக்குள் நாற்பது திரையரங்குகளில் திரையிட திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.
திருக்குறள் குறித்த தமிழக ஆளுநரின் பேச்சு குறித்து கேட்டபோது, “தமிழக ஆளுநர் பா.ஜ.க-வின் பிரதிநிதியாகவே செயல்பட்டு வருகிறார். திருவள்ளுவரின் கருத்துகள் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகின்றன. அவருக்கு காவி நிறம் பூசுவது, ஒரு குறிப்பிட்ட மதத்துக்குள் அடைப்பது ஏற்புடையதல்ல. ஆளுநர், ஆளுநராக செயல்படாமல் அரசியல் செய்து வருகிறார். இனியும் பா.ஜ.க-வின் ஏஜென்ட்டாக ஆளுநர் செயல்படக்கூடாது” என்றார்.
ராஜராஜ சோழனை வைத்து எழுந்திருக்கும் சர்ச்சை குறித்து கேட்டபோது, “தமிழ் இனத்துக்கே பெருமை தரக்கூடிய மன்னர்தான் ராஜராஜ சோழன். தென் கிழக்கு ஆசியாவையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர். அவரையும் திருவள்ளுவரைப் போல் மதத்துக்குள் அடக்குவது மலிவான அரசியல். ராஜ ராஜ சோழனின் மதம் குறித்தான கருத்துகளைத் தெரிவிக்கும் அரசியல் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்களின் கருத்துகளை மக்கள் புறந்தள்ள வேண்டும். ராஜ ராஜ சோழனை நாம் அனைவரும் தமிழனாகப் பார்க்க வேண்டும். ராஜ ராஜ சோழனின் பெருமையை மறந்துவிட்டு கீழ்தரமான அரசியல்தான் தற்போது நடைபெறுகிறது. தமிழகத்தில் மத அரசியலுக்கு இடம் கிடையாது.
முல்லைப்பெரியாறு அணையைப் பொறுத்தவரை கேரள அரசு நீதிமன்றத் தீர்ப்பை மீறி செயல்பட்டு வருகிறது. அதற்கு மத்திய பா.ஜ.க அரசும் துணை போகிறது. அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு குந்தகம் விளைவிக்கும்படி கேரள அரசு ஈடுபட்டால் ம.தி.மு.க முதல் ஆளாக களத்தில் இறங்கி போராடும்” என்றார்.