பெங்களூரு: கன்னட மொழியும், கர்நாடகா கலாச்சாரமும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது ஏன் என்று கன்னட ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முக்கியத் தலைவரான ராகுல் காந்தியின் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை யாத்திரை தற்போது பாஜக ஆளும் மாநிலமான கர்நாடகாவில் நடைபெறுகிறது. இந்த யாத்திரையின் போது ராகுல் காந்தி பல்வேறு மக்களைச் சந்தித்து வருகிறார்.
அந்த வகையில், வெள்ளிக்கிழமை ராகுல் காந்தி கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஆசிரியர்களுடன் உரையாடினார். அப்போது, தங்களின் கல்வி முறை தொடர்ந்து எதிர் கருத்தியல் சக்திகளால் தாக்குதலுக்கு உள்ளாகப்படுவதாகவும் தற்போது அந்த தாக்குதல் பாடத்திட்டம் வரை வந்தடைந்துள்ளதாக கன்னட ஆசிரியர்கள் கவலை தெரிவித்ததாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
ஆசிரியர்களுடனான உரையாடல் குறித்து ராகுல் காந்தி கூறுகையில், “நான் ஆசிரியர்கள், மாணவர்களுடன் பேசினேன். அப்போது ஏன் அரசுப் பள்ளிகள் மட்டும் புறக்கணிக்கப்படுகின்றன? ஏன் எங்களது கலாச்சாரம், எங்களது கன்னட மொழி தாக்குதலுக்குள்ளாக்கப்படுகிறது. பாடப் புத்தகங்களில் இருந்து கர்நாடகாவின் வரலாறுகள் ஏன் நீக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பினர்.
கடந்த 75 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட அனைத்தையும் அழித்தொழிக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை 2020 வடிவமைக்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாற்றங்களின் முக்கிய நோக்கமே, அனைத்தையும் வகுப்புவாதமயாக்குவது, மையப்படுத்துவது, வணிகமயமாக்குவது மட்டுமே.
இதன் மூலம் கல்வி முறையை சீர்குலைக்கவும், அரசியல் அமைப்பை சீர்குலைக்கவும் பல திட்டமிட்ட செயல்கள் நடக்கின்றன” என்று அவர் தெரிவித்தார்.
இந்த உரையாடலின் போது, பூர்ணிமா என்ற அரசுப்பள்ளி ஆசிரியர், இன்றைய சூழலில் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாதது ஆகிய இரண்டும் அரசுப் பள்ளிகளின் முக்கிய பிரச்சினையாக உள்ளது. மாணவர்கள் இன்று ஆங்கிலமும் இந்தியும் கற்றுக்கொள்வது அவசியம். ஏனென்றால் மாநிலத்தின் பல கிராமங்களில் இருக்கும் வங்கிகளில் கூட விண்ணப்பபடிவங்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கின்றன என்று தெரிவித்தார்.
இதனைக் கேட்ட ராகுல் காந்தி, கர்நாடகாவில் கன்னட மொழியில் வங்கி விண்ணப்பப்படிவங்கள் கிடைப்பதில்லை என்பது குறித்து ஆச்சர்யப்பட்டார்.
இந்த உரையாடல் நிகழ்ச்சிகுறித்து பேசிய மாநில காங்கிரஸின் ஊடகப்பிரிவு பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பிரியங்க் கார்கே கூறுகையில், ஆசிரியர்கள் கர்நாடகாவின் அடையாளம், கன்னட மொழிகுறித்து ராகுல் காந்தியுடன் விவாதித்தனர்.
அதற்கு அவர் ஒவ்வொருவரின் தாய்மொழியும் முக்கியம். அரசியல் சாசனம் அதற்கான உரிமையை அனைவருக்கும் வழங்கியுள்ளது. நாங்கள் அனைத்து மொழிகளையும் மதிக்கிறோம். அதனால் இந்தியை மட்டும் தேசிய மொழியாக அறிவித்து உங்கள் (கன்னடம்) மொழிகள் உள்ளிட்ட பிராந்திய மொழிகள்,கலாச்சாரத்தை அச்சுறுத்தும் எண்ணம் இல்லை என்று ராகுல் காந்தி தெளிவாக கூறியதாக பிரியங்க் கார்கே தெரிவித்தார்.