புதுச்சேரி: புதுச்சேரியில் பொதுமக்கள், துணைநிலை ஆளுநரை சந்திக்கும் ‘மக்கள் சந்திப்பு’ நிகழ்ச்சி துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று தொடங்கியது. முதல் நாளில் மாற்றுத்திறனாளி பெண் உட்பட 20-க்கும் மேற்பட்டோரிடம் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குறைகளைக் கேட்டறிந்தார்.
துணைநிலை ஆளுநரை சந்திக்க விரும்புபவர்கள் பலர் முன்பதிவு செய்து சந்தித்து வருகிறார்கள். மேலும் பலரும், பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் துணைநிலை ஆளுநரைச் சந்திக்க விரும்புவதால் மாதந்தோறும் ஒவ்வொரு முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் மக்கள் சந்திப்பு நடைபெறும் என்றும், மேலும் துணைநிலை ஆளுநரைச் சந்திக்க விரும்புபவர்கள் 0413-2334050, 2334051 என்ற தொலைபேசி எண்களில் அல்லது [email protected] என்ற இணைய முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் தொடங்கியது. முன்பதிவு செய்தவர்களின் முன்னுரிமை அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட மக்களை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். முதல் நாளான இன்று காலை 11 மணி முதல் 12.30 மணி வரை மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் உட்பட 20-க்கும் மேற்பட்டவர்களை சந்தித்து குறைகளை கேட்டு பதில் அளித்தார்.