சமீபத்தில் புதுச்சேரிக்கு வந்த மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ”புதுச்சேரியில் இருக்கும் அரசுப் பள்ளிகள் அனைத்தும் விரைவில் சி.பி.எஸ்.இ பள்ளிகளாக மாற்றப்படும்” என்று கூறியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும், மாநில தி.மு.க அமைப்பாளருமான எம்.எல்.ஏ சிவா அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், “புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளை சி.பி.எஸ்.இ பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம், புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் வைத்த கோரிக்கைக்கு ஒரேநாளில் அனுமதி கொடுத்து மிகப்பெரிய அரசியலை செய்திருக்கிறது பா.ஜ.க.
புதுவையில் 400-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் உள்ளன. புதுவை மாநிலத்தைப் பொறுத்தவரை இங்கு தனி கல்வி வாரியம் கிடையாது என்பதால், தமிழக பாடத்திட்டங்களே பின்பற்றப்பட்டு வருகின்றன. அதேபோல ஏனாம் பிராந்தியத்தில் ஆந்திர மாநிலத்தின் பாடத்திட்டமும், மாஹேவில் கேரள மாநிலத்தின் பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரியிலுள்ள அரசுப் பள்ளிகள் அனைத்தும் சி.பி.எஸ்.இ பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று, ஒன்றிய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், ஆளுநர் தமிழிசை மற்றும் புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் கோரிக்கையின் அடிப்படையில்தான் இது நிறைவேற்றப்படவிருக்கிறது என்று கூறியிருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இந்த முடிவு குறித்து புதுவை கல்வி அமைச்சர் சட்டமன்றத்தில் ஏன் விவாதிக்கவில்லை? ஏன் பொதுமக்களை அழைத்து கருத்து கேட்கவில்லை? கடந்த காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி ஆட்சியின்போது தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்.
ஆளுநர்களுக்கு கொள்கையினை கொண்டு வர அரசியலமைப்பு சட்டத்தில் அதிகாரம் இல்லை. பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் நாட்டிலேயே சிறந்து விளங்கும் புதுச்சேரியில் இவர்களது சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் தேவையற்றது. இதனால் ஆசிரியர்களும் பாதிக்கப்படுவார்கள். வடமாநிலத்தவரை பணியில் அமர்த்துவார்கள். ஆசிரியர்களுக்கான `TET’ தேர்வில் தேர்வானது செல்லாது என்பார்கள். CTET மத்திய ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் அரசு வேலை என்பார்கள். அதனால் இந்த விவகாரத்தில் புதுச்சேரி மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
புதுச்சேரி அரசின் கல்வித் துறையில் கீழுள்ள பள்ளிகளை சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திற்கு மாற்றுவதால் நமது மாநிலத்தின் கல்விக்கான அதிகாரம் முற்றிலுமாக பறிக்கப்படும். மேலும், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, ஆசிரியர் பணி நியமனம் போன்ற அனைத்து உரிமைகளும் ஒன்றிய அரசின் கைகளுக்கு போய்விடும் பெரும் அபாயம் உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழி பேசும் புதுச்சேரி பிராந்திய பகுதிகளில் தாய்மொழி மற்றும் ஆங்கிலத்தை இருமொழிக் கொள்கைகளுடன் பின்பற்றி வருகின்ற தனித்தன்மை வாய்ந்த மாநிலம் புதுச்சேரி. ஒற்றைக்குடையின் கீழ் புதுச்சேரி கல்வித்துறையை கொண்டு வருவோம் என ஒன்றிய அமைச்சர் கூறுவது சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் மூலம் இந்தித் திணிப்பை செய்யும் முயற்சி.
அத்துடன் நமது மாணவர்களின் தாய்மொழி வளம், நமது மொழி, பண்பாடு, நாகரிகம், வரலாறு என அனைத்தையும் நேரடியாக சிதைக்க முயற்சிக்கிறார்கள். மேலும் அரசியலுக்காக மட்டுமே தேசியக்கல்வி கொள்கையை எதிர்க்கட்சிகள் எதிர்க்கிறார்கள் என்று மத்திய அமைச்சர் குறிப்பிட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். சமச்சீரான கல்வியை, மாணவர்களின் கற்றல் மற்றும் கற்பித்தலை உறுதி செய்யும் மாநில பாடத்திட்டத்தை சிதைக்கும் இந்த அறிவிப்பினை உடனே திரும்பப் பெற வேண்டும்.
புதுவை முதல்வர் ரங்கசாமி அவர்களின் அனுமதி பெற்றுத்தான் இந்த கோரிக்கையும் அறிவிப்பும் வெளிவந்ததா என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். குலக்கல்வி திட்டத்தை மறைமுகமாகவும், நேரடியாகவும் திணிக்கப் பார்க்கிறார்கள். இந்தியை சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் கற்றால் மட்டுமே இங்கு வளர்ச்சி என்று பரப்பி திட்டமிட்டே பெற்றோரை குழப்புகிறார்கள். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தால் இருபது ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ் தெரிந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் போகும் சூழல் ஏற்படும். வட இந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாகும்.
உள்ளூர் பூர்வக்குடிகள் மாநிலத்தை விட்டு இடம்பெயரக்கூடிய அபாயம் ஏற்படும். தற்போது நம் பாடத்திட்டத்தில் படித்த பிள்ளைகள் அனைத்து துறைகளிலும் சாதனையாளர்களாக இருக்கிறார்கள். சக்கையை கொண்டு சாறு பிழிய முற்படுவதே தேசிய கல்விக் கொள்கை, அதனால் புதுச்சேரி மாணவர்களுக்கு எந்த பயனும் இல்லை. மாநில பாடத்திட்டத்தைவிட சி.பி.எஸ்.இ பாடத்திட்டம்தான் சிறந்தது என்பதற்கு எந்தவித ஆதாரமும், சான்றும் கிடையாது. அதனால் மாநிலப் பாடத்திட்டத்தை மாற்றும் முடிவை இந்த பா.ஜ.க கூட்டணி அரசு கைவிட வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.