திருப்பதி : திருப்பதி திருமலையில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை என்பதால் திருப்பதி மலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இலவச தரிசனத்திற்காக சுமார் 8 கிலோமீட்டர் தொலைவு வரை வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். எனவே பக்தர்கள் தரிசனத்திற்காக 56 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் திருப்பதி மலையில் தங்கும் அறைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இலவச தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு சாமி தரிசன வாய்ப்பை விரைவாக ஏற்படுத்திக் கொடுக்க அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் சார்பில் மேற்கொண்டு வருகின்றனர்.
வரிசையில் நிற்கும் பக்தர்கள் எண்ணிக்கை ஒன்றை லட்சத்துக்கு அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.