புதுடெல்லி: மதம் மாறிய தாழ்த்தப்பட்டோருக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்க கோரு வது குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் 3 பேர் அடங்கிய ஆணையத்தை மத்திய அரசு நியமித்துள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்த போது தாழ்த்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த இந்துக்களுக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்தில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. கடந்த 1956-ம் ஆண்டில் சீக்கிய மதம், 1990-ம் ஆண்டில் பவுத்த மதத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்டோருக்கும் எஸ்.சி. பிரிவுக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் தலித் கிறிஸ்தவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்க வகை செய்யும் மசோதா 1996-ல் கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த மசோதா நிறைவேறவில்லை.
இந்த சூழலில் இந்து மதத்தில் இருந்து முஸ்லிம், கிறிஸ்தவம் உள்ளிட்ட மதங்களுக்கு மாறிய தாழ்த்தப்பட்டோருக்கும் எஸ்.சி. அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி கடந்த 2004-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரியில் தலித் கிறிஸ்தவர்களின் தேசிய கவுன்சில் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, “கடந்த 2004-ம் ஆண்டில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. மதம் மாறிய தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 2007-ம் ஆண்டில் அந்த ஆணையம் அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அப்போதைய மத்தியஅரசு, அறிக்கையை ஏற்கவில்லை” என்று தெரிவித்தார்.
இதையடுத்து, “மதம் மாறிய தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக் கீடு வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். வரும் 11-ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இந்த பின்னணியில், மதம் மாறிய தாழ்த்தப்பட்டோருக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்க கோருவது குறித்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையில் 3 பேர் அடங்கிய ஆணையத்தை மத்திய அரசு நியமித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை கூடுதல் செயலாளர் சுரேந்தர சிங் வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:
பழங்காலம் முதல் சமூக ரீதியாக புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு எஸ்சி. அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் இதர மதங்களை சேர்ந்தோருக்கும் எஸ்.சி. அந்தஸ்து வழங்க சில குழுக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
புதியவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்க தற்போது அந்த பிரிவில் உள்ள மக்களும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். இது சமூக நீதி, அரசமைப்பு சாசனம் சார்ந்த முக்கிய விவகாரம் ஆகும்.
இதுகுறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் ஆணையம் அமைக்கப்படுகிறது. இதில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரவீந்தர் குமார் ஜெயின், பல்கலைக்கழக மானியக் குழுவை சேர்ந்தசுஷ்மா யாதவ் ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.
எஸ்.சி. அந்தஸ்து கோரும் புதியவர்களின் கோரிக்கைகளை ஆணையம் பரிசீலிக்கும். புதியவர்களை சேர்த்தால் தற்போது எஸ்.சி. பிரிவில் இடஒதுக்கீடு பெறுவோருக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இதர விவகாரங்கள் குறித்து ஆணையம் ஆய்வு செய்யும். ஆணைய தலைவர் பதவியேற்ற நாளில் இருந்து 2 ஆண்டுகளில் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.