’மல்லிப்பூ’வுக்கு மயங்கிய சீமான் – பாராட்டு பத்திரத்தில் சொன்ன அன்பான வார்த்தைகள்

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படம் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இந்தப் படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். படம் ரிலீஸான முதல் நல்ல வசூலை வாரிக் குவித்ததால், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் சிம்பு ஆகியோருக்கு சிறப்பு பரிசு வழங்கி கவுரவித்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘மல்லிப்பூ’ பாடல் செம ஹிட் அடித்துள்ளது. கேட்போர் அனைவரையும் ரசிக்க வைத்து, மயக்கும் இப்பாடலை பலரும் ரிப்பீட் மோடில் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், இந்தப் பாடலை வெகுவாக ரசித்திருப்பதுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு படக்குழுவினரை மனதார பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் அந்த பாராட்டு மடலில், “என்னுடைய அன்புத்தம்பி சிலம்பரசன் அவர்கள் நடித்து, தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு இசைத்தமிழன் என் ஆருயிர் இளவல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இசையமைத்து வெளிவந்திருக்கிற ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில், என் பாசத்திற்கும் அன்பிற்கும் உரிய அக்கா தாமரை அவர்கள் எழுதி, பாடகி மதுஸ்ரீ அவர்கள் இனிமையான குரலில் பாடியிருக்கின்ற ‘மல்லிப் பூ’ பாடலை அண்மை நாட்களாக எண்ணற்ற முறை என் பயணங்களிலும், என் ஓய்வு நேரங்களிலும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.

அயலகத்தில் பணிபுரியும் தன் அருமை கணவனை நினைத்து அன்பு மனைவி பாடுவது போல அமைந்திருக்கும் அப்பாடல் வரிகளும், இசை கோர்ப்பும் தனித்துவமாக அமைந்திருப்பது மனதை மயக்குகிறது. கணவனைப் பிரிந்து இருக்கக்கூடிய பெண்ணின் ஏக்கத்தையும், வலியையும் தன் மென் அழகு தமிழால் அப்படியே வடித்திருக்கின்ற அக்கா கவிஞர் தாமரை அவர்களுக்கும், அவ்வரிகளுக்கு ஆகச்சிறந்த இசையால் உயிரூட்டியிருக்கும் நம் தலைமுறையின் ஈடு இணையற்ற இசைத்தமிழன் அன்பு இளவல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கும் எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

உங்கள் பணி தொடரட்டும் தொடரட்டும்..! அக்கா தாமரை அவர்களுக்கு இதுபோன்ற மிகச் சிறந்த பாடல்கள் எழுதுவதற்கான வாய்ப்பைத் தொடர்ந்து வழங்கிவரும் இயக்குநர் அன்புச்சகோதரன் கௌதம் மேனன் அவர்களுக்கும், இப்படத்தைத் தயாரித்துள்ள சகோதரர் வேல்ஸ் ஐசரி கணேஷ் அவர்களுக்கும் எனது பேரன்பும், வாழ்த்துகளும்..!” எனக் கூறியுள்ளார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.