நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்
, அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று (அக்டோபர் 8) மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தனர்.
சென்னை, தங்கசாலையில் உள்ள அரசு மைய அச்சகம் அருகில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களிடையே ஏற்படுத்திடும் வகையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ், நீராதாரம் காத்தல், மழைநீர் சேகரிப்பு, பாரம்பரிய ஏரி ஆதாரங்கள் / ஏரிகளை புதுப்பித்தல், நீர்நிலை மேம்பாடு, மறு பயன்பாடு, ஆழ்துளைக் கிணறு மீள் நிரப்புதல் ஆகியவற்றின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக வடகிழக்குப் பருவமழை துவங்கும் முன்னர் அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசுப் பள்ளிகளில் உள்ள மழைநீர் கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகள் மேறகொள்ளப்பட்டு வருகிறது. மேலும், குடியிருப்புகள், தனியார் மருத்துவமனைகள், திரை அரங்குகள், திருமண மண்டபங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் அமைப்பதற்கும், ஏற்கனவே உள்ள மழைநீர் கட்டமைப்புகளை புனரமைப்பு செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மேற்கொண்டு வருகிறது. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைப்பதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள், கையேடுகள் போன்றவைகள் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனத்தின் வாயிலாக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
மேலும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார தன்னார்வல மகளிர் குழுவினர் மூலம் மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், கையேடுகள் போன்றவைகள் பொதுமக்களிடையே விநியோகிக்கப்படும். மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்வதற்கென்றே தண்ணீர் தன்னார்வலர்கள் (Water Volunteers) குழு, மகளிர் சுயஉதவிக் குழுவினரைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டுள்ள இக்குழுவினர் தங்களுக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடையே கலந்துரையாடி மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்வார்கள்.
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு / விவரங்களை பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்கு ஏதுவாக 200 பணிமனைகளில் 1000 தன்னார்வலர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 35,000 தெருக்களில் அமைந்துள்ள 11 இலட்சம் குடியிருப்புகளுக்கு நேரடியாக சென்று மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்த விவரங்களை தெரிவிப்பார்கள்.
விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார தன்னார்வல மகளிர் குழுவினர் குடியிருப்புகளின் தன்மை, கிணறு வகைகள், குடிநீர் இணைப்பு, கழிவுநீர் இணைப்பு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பின் விவரங்களை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தி, குடிநீர் / கழிவுநீர் பற்றிய குறைகள் மற்றும் நீரில் உள்ள திடப்பொருட்களின் அளவு ஆகியவற்றை தெருக்கள் வாரியாக கேட்டறிந்து, மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்வார்கள்.
மேலும், பொதுமக்கள், மழைநீர் சேகரிப்பு பணிகளை மேற்கொள்ளவரும் தன்னார்வலர்களுக்கு சரியான தகவலை தெரிவித்து ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.
பின்னர், ரூ.1.91 கோடி மதிப்பீட்டில், சென்னை ஏழு கிணறு மலையப்பன் தெரு கழிவுநீரகற்று நிலையத்திலிருந்து புதிய கழிவுநீர் உந்து குழாய் பதிக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.1.94 கோடி மதிப்பீட்டில், சென்னை, வ.உ.சி சாலையில், ஜட்காபுரம், வால்டாக்ஸ் ரோட்டில் மேம்படுத்தப்பட்ட கழிவுநீரகற்று நிலையத்தை திறந்து வைத்து ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் சென்னை, ஏழுகிணறு, கோவிந்தப்பா தெருவில் புதிய அலுவலக கட்டிடங்களை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திறந்து வைத்தனர்.
அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது, “முதலமைச்சர் சென்னையில் தங்கு தடையின்றி குடிநீர் வழங்க தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். .தமிழ்நாட்டில் கூட்டுக் குடிநீர் திட்டமானது குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் 548 இடங்களில் சுமார் 4.5 கோடி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
நகராட்சி நிர்வாக துறையின் சார்பில் குடிநீர் திட்ட பணிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு சுமார் 16,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 14,000 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட பணிகளை மேற்கொள்ள ஜைக்கா (JICA) நிறுவனத்திடம் இருந்து நிதி உதவி பெறவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் மட்டும் சுமார் 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதுதவிர பூண்டி, புயல் மற்றும் தேர்வாய்கண்டிகை போன்ற நீர்த்தேக்கங்களில் இயற்கையாகவே நீரை தேக்கி அந்த தண்ணீரை பொதுமக்களுக்கு விநியோகிக்கவும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
வட சென்னை பகுதிகளில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக பழைய கழிவு நீர் குழாய்களே செயலாக்கத்தில் உள்ளன. பல்வேறு இடங்களில் பழுதடைந்துள்ளன. இன்று இந்த பகுதியில் புதிய கழிவுநீர் உந்து நிலையம், குடிநீர் வாரிய பகுதி அலுவலகம் மற்றும் புதிய கழிவுநீர் குழாய் பதிப்பு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது .
எனவே வட சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய கழிவு நீர் குழாய்கள் பதிக்கப்பட்டு அனைத்து கழிவுநீரும் முறையாக வெளியேற்றும் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெறும்” என்று கூறினார்.