கோத்தகிரி
நீலகிரி மாவட்ட அளவிலான சி டிவிஷன் லீக் போட்டியில் எல்லநள்ளி அணியை வீழ்த்தி, கோத்தகிரி காட்டிமா கிரிக்கெட் அணி வெற்றிப் பெற்றது.
2-வது லீக் போட்டி
நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் ஏ, பி மற்றும் சி டிவிஷன் என 3 டிவிஷனாக பிரிக்கப்பட்டு ஆண்டு தோறும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு டிவிஷனிலும் தலா 10 அணிகள் உறுப்பினர்களாக தங்களைப் பதிவு செய்து மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சி டிவிஷன் லீக் போட்டிகளில் அதிக புள்ளிகள் பெறும் 2 அணிகள் பி டிவிஷனுக்கும், பி டிவிஷனில் அதிக புள்ளிகள் பெறும் 2 அணிகள் முதல் டிவிஷனான ஏ டிவிஷனுக்கும் தகுதி உயர்த்தப்படுவர்.
இந்தநிலையில் நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடப்பாண்டிற்கான சி டிவிஷன் லீக் போட்டிகள் கோத்தகிரி, ஊட்டி மற்றும் எல்லநள்ளியில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிகள் கடந்த 2 ஆம் தேதி ஊட்டியில் தொடங்கியது. இந்தப் போட்டியின் 2-வது லீக் போட்டி கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்றது.
கோத்தகிரி அணி
இதில் கோத்தகிரி காட்டிமா கிரிக்கெட் அணி மற்றும் எல்லநள்ளி லெவன்ஸ் கிரிக்கெட் அணிகள் பங்கேற்று விளையாடின. தலா 35 ஓவர்கள் கொண்ட போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கோத்தகிரி காட்டிமா அணி நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்களை எடுத்தது. இந்த அணி வீரர் மணிகண்டன் 73 ரன்கள் எடுத்தார்.தொடர்ந்து 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய எல்லநள்ளி லெவன்ஸ் அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 162 ரன்களில் ஆல் அவுட் ஆனது. காட்டிமா அணியின் பந்து வீச்சாளர் மணிகண்டன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் 70 ரன்கள் வித்தியாசத்தில் கோத்தகிரி காட்டிமா அணி வெற்றி பெற்றது.