இந்து மதம் பற்றிய மனுஸ்மிருதி நூலில், மனிதர்களைப் பிறப்பின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் வர்ணாசிரமத்துக்கு எதிராக அரசியல் தலைவர்கள் பலரும், பல்வேறு மேடைகளில் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். சில நாள்களுக்கு முன்னர் வர்ணாசிரமம் குறித்து, தி.மு.க எம்.பி ஆ.ராசா பேசியதுகூட பேசுபொருளாகியிருந்தது.
இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், `வர்ணாசிரமம்’, `சாதி’ குறித்த கருத்துகள் முற்றிலும் கைவிடப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். நேற்றைய தினம் நாக்பூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், `வர்ணாசிரமம், சாதி அமைப்பு உள்ளிட்டவை முதலில் பாகுபாடுகளைக் கொண்டிருக்கவில்லை. அவை ஒரு நோக்கத்தை நிறைவேற்றின!’ என்ற கூற்று குறித்துப் பேசிய மோகன் பகவத்,
“இனி யாரவது அதைப்பற்றிக் கேட்டல், அது கடந்துவிட்டது. அதனை மறந்துவிடுவோம் என்று பதில் சொல்ல வேண்டும். பாகுபாட்டை ஏற்படுத்தும் அனைத்தும் பூட்டப்படவேண்டும்” என்று கூறினார்.
மேலும், முந்தைய தலைமுறையினர் தவறு செய்ததைச் சுட்டிக்காட்டிய மோகன் பகவத், “அந்தத் தவறுகளை ஏற்றுக்கொள்வதில் எந்தப் பிரச்னையும் இருக்கக் கூடாது. அதோடு, நம் முன்னோர்கள் செய்த தவறுகளை ஏற்றுக்கொள்வதால் அவர்கள் தாழ்ந்தவர்களாகிவிடுவார்கள் என்று நினைத்தால் அது நடக்காது. ஏனெனில் அனைவரின் முன்னோர்களும் தவறு செய்திருக்கின்றனர்” என்று தெரிவித்தார்.