வாலாஜாபாத்: வாலாஜாபாத் அருகே ஊத்துக்காடு கூட் சாலை பகுதியில் தனியார் இருசக்கர மற்றும் கார்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு வாலாஜாபாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு ஷிப்ட் அடிப்படையில் வேலை நடந்து வருகிறது. ஊழியர்களுக்காக கேன்டீனும், தொழிற்சாலை வளாகத்தில் இயங்கி வருகிறது.
இந்நிலையில், நேற்றிரவு வேலையில் இருந்த 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், கேன்டீனில் உணவு சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் 30க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி எடுத்தது. அடுத்தடுத்து மயங்கி கீழே விழுந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. வேலையில் இருந்த சக ஊழியர்கள் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் ஓடி வந்து, அனைவரையும் ஆம்புலன்ஸ் மூலம் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களில் சிலர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்கள், சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர்.
தகவலறிந்து காஞ்சிபுரம் டிஎஸ்பி ஜூலியர் சீசர், வாலாஜாபாத் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். கேன்டீனில் இருந்த உணவை பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் பரபரப்பு நிலவியது.