தமிழகத்தில் கஞ்சாவை ஒழிக்கும் விதமாக ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை’ என்னும் நடவடிக்கையை கடந்தாண்டு இறுதியில் தமிழக காவல்துறை நடத்தியது. அதன்படி, மாநிலத்தில் கஞ்சா விற்று வந்தவர்கள் கைது செய்யப்பட்டு டன் கணக்கான கஞ்சாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. தொடர்ந்து அந்த ஆபரேஷன் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மாநிலத்தில் ரவுடிசத்தை ஒடுக்கும் நடவடிக்கையாக ‘மின்னல் ரவுடி வேட்டை’ என்னும் ஆபரேஷனை தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபுவின் உத்தரவின்பேரில் தொடங்கியுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் போலீசார் நடத்திய மின்னல் ரவுடி வேட்டையில் கடந்த 24மணி நேரத்தில் 133 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், பல ஆண்டுகளாக போலீசாரிடம் பிடிபடாமல் இருந்த 13 முக்கிய ரவுடிகளும் கொலை, கொள்ளை மற்றும் பிடிவாரன்டில் ஆஜராகாமல் இருந்த பல ரவுடிகள் பிடிப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த 15 ரவுடிகள் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்றும் 105 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையியில், தமிழகம் முழுவதும் மின்னல் ரவுடி வேட்டை தொடரும் என்றும் ரவுடிகளுக்கு எதிராக காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் தொடர் தொல்லையாக இருக்கும் ரவுடிகளை காவல்துறையின் அதிரடி ஆபரேஷனால் கைது செய்துள்ள நடவடிக்கைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், இந்த ஆபரேஷனை காலவரையின்றி தொடர்ந்து தீவிரமாக நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.