3வது நாளாக தடங்கலை சந்தித்த வந்தே பாரத் ரயில் – சக்கரங்கள் பழுதாகி வழியிலேயே நின்றது

முதல் நாள் எருமை மாடு மோதியும், இரண்டாவது நாள் பசு மாடு மோதியும், வந்தே பாரத் ரயில் சேதமடைந்த நிலையில் மூன்றாவது நாளாக டெல்லி வாரணாசி இடையே இயக்கப்பட்டபோது சக்கரங்கள் பழுதடைந்து வழியிலேயே நின்றது.

குஜராத் தலைநகர் காந்தி நகரையும், மகாராஷ்டிரா தலைநகரையும் இணைக்கும் வகையில் ‘வந்தே பாரத்’ விரைவு ரயில் சேவையைக் கடந்த செப்டம்பர் 30ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த நவீன ரயில் 100 கிலோமீட்டர் வேகத்தை சுமார் 52 வினாடிகளில் எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும். காந்திநகரில் இருந்து மும்பைக்கு 6 முதல் 7 மணி நேரத்துக்குள் இந்த ரயில் சென்றுவிடும். வைஃபை, 32 இன்ச் டி.வி போன்ற வசதிகள் இதில் உள்ளன.

image
இவ்வளவு சிறப்பு வாய்ந்த ‘வந்தே பாரத்’ ரயில் கடந்த 3 தினங்களாக பல தடங்கல்களை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் இந்த ரயில், பாட்வா – மணிநகர் இடையே சென்றுகொண்டிருந்தபோது தண்டவாளத்தில் குறுக்கிட்ட எருமை மாடுகள் மீது சரமாரியாக மோதியது. இதில் ரயிலின் முன்பாகம் அதே இடத்தில் கழன்று விழுந்தது. இந்த சம்பவத்தையடுத்து எருமை மாடுகளின் அடையாளம் தெரியாத உரிமையாளர் மீது ரயில்வே காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த விபத்தையடுத்து ரயிலின் முன் பாகம் அன்றே சரி செய்யப்பட்டது. இதில் ரயில் என்ஜினுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று ரயில்வே துறை தெரிவித்திருந்தது. இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், மற்றொரு சம்பவம் அரங்கேறியது. காந்திநகர்-மும்பை இடையே நேற்று இந்த ரயில் இயக்கப்பட்டபோது குறுக்கே பசு மாடு வந்த நிலையில் இதேபோல ரயிலின் முன்பாகம் லேசாக சேதமடைந்தது. இவ்வாறு தொடர்ந்து இரண்டு நாட்கள் விபத்துக்களாக நிகழ்ந்து வரும் நிலையில், மூன்றாவது நாளான இன்று ரயில் சக்கரத்தில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக ரயில் பாதியிலேயே நின்றுள்ளது.

image
இன்று காலை டெல்லியிலிருந்து – வாரணாசி நோக்கி சென்றுகொண்டிருந்த வந்தே பாரத் ரயிலின் சக்கரங்கள் பழுதடைந்து வழியிலேயே நின்றது. உடனடியாக ரயிலை பரிசோதித்த ஊழியர்கள் அங்கிருந்து ரயில் மெதுவாக நகர்த்தி குர்ஜா ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து அங்கு சதாப்தி விரைவு ரயில் கொண்டுவரப்பட்டு பயணிகள் அந்த ரயிலில் மாற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிக்க: பிரேக் போட்டு இருந்தால் பயணிகளுக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கும் -வந்தே பாரத் ரயில் விபத்து!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.