40 வருஷமாச்சு ஒரு புகார் கூட வரல.. இந்தியாவில் இப்படியொரு கிராமமா? எப்படி சாத்தியமாச்சு!

பெட்டி கேஸ் முதல் புலப்படாத பல குற்ற வழக்குகள் நிலுவையில் இல்லாத காவல் நிலையங்களை காண்பதே அரிதாக விஷயம்தான். அதேபோல, எந்த ஒரு நாளும் ஒரு வழக்கும் பதியாமல் இருந்ததாக சரித்திரமே இருந்திருக்காது என்பதே பொதுவான கருத்தாக இருக்கும்.
ஆனால் இந்தியாவில் உள்ள இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட 4 தசாப்தங்களாகவே எந்த குற்றமும் நிகழவில்லை என்றும் அது தொடர்பான ஒரு புகார் கூட பதிவாகவே இல்லையென்ற தகவல் வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.
தெலங்கானா மாநிலத்தின் கமாரெட்டி மாவட்டத்தின் பிக்னுர் மண்டலத்தில் உள்ளது ரெகாட்லாப்பள்ளி என்ற கிராமம். இந்த கிராமத்தில் 180 குடும்பங்கள் கொண்ட 930 பேர் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளாக எந்த குற்ற நிகழ்வுகளும் நடந்ததாக எந்த புகாரும் எழவில்லையாம்.
image
இது தொடர்பாக பேசியுள்ள ரெகாட்லாபள்ளி கிராமத்து தலைவர்கள், “மது குடிப்பதாக எங்கள் கிராமத்தினரிடையே மோதலோ, தகராறோ ஏற்படும் என்பதால் கடந்த 12 ஆண்டுகளாக இருந்தவந்த மதுக்கடைகளும் அண்மையில்தான் மூடப்பட்டது. அதேச்சமயத்தில் கிராமத்திற்குள் எவரேனும் மது விற்றால் அவர்கள் கிராம நிர்வாகத்திடம் 5,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
இதுபோக, முதியோர்களிடையே ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக 63 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த குழு உறுப்பினர்கள் சம்மந்தபட்டவர்களின் வீட்டுக்கே சென்று சமரசம் செய்து வைப்பார்கள்.” எனக் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து பேசியுள்ள அவர், “நாங்கள் முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியே உள்ளதால், ரியாகட்லபள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நிலத்தின் கடைசி ஏக்கர் வரை எங்கள் மக்கள் விவசாயம் செய்து வருகிறார்கள்.
image
காய்கறிகளை பயிரிட்டு அருகிலுள்ள சந்தைகளில் லாபகரமான முறையில் விற்பனை செய்வதன் மூலம் கிராமத்தின் பொருளாதாரமும் வலுவடைகிறது. கிராம மக்களிடையே உள்ள ஒற்றுமையும் சகோதரத்துவமும் கிராமத்தை ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கி இட்டுச் சென்றுள்ளது.” எனத் தெரிவித்திருக்கிறார். ஆகவே ரியாகட்லப்பள்ளியை முன்மாதிரி கிராமமாகப் பின்பற்றி, தங்கள் கிராமங்களை வழக்குகள் இல்லாத கிராமங்களாக மேம்படுத்த, மற்ற கிராமங்களின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து, கமாரெட்டி சிறப்பு நீதித்துறை மாஜிஸ்திரேட்டும், மாவட்ட சேவைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஸ்ரீதேவி, ரெகாட்லாப்பள்ளி கிராமத்தை ‘Litigation Free village’ அதாவது “வழக்குகள் இல்லாத கிராமம்” என அறிவித்து, அதற்கான சான்றிதழையும் நடந்து முடிந்த 75வது சுதந்திர தினத்தன்று வழங்கியிருக்கிறார்.
மேலும், கடந்த 40 ஆண்டுகளாக கிராமத் தலைவர்களை அணுகி தங்களுக்குள் நிகழும் பிரச்னைகளை தீர்த்துக் கொள்வதால், இதுகாறும் எந்த வழக்கும் இல்லாமல் இப்படியொரு கிராமம் இருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக கமாரெட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாஸ் பெருமிதம் கொண்டிருக்கிறார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.