அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

திமுக முன்னாள் எம்பியான மைத்ரேயன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்தபோது தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் அணியில் இருந்தார். தர்மயுத்தம் முடிந்த பிறகு அதிமுகவின் இரு அணிகளும் ஒன்று சேர ஏதுவாக இரு தரப்பினர் பேச்சுவார்த்தையில் மைத்ரேயனும் கலந்து கொண்டார்.

இதையடுத்து அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த பிறகு தனது ட்விட்டரில், “அணிகள் மாறினாலும் முகங்கள் மாறவில்லை” என சூசகமாக ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் இடையே ஒற்றைத் தலைமை பிரச்சனை எழுந்த போது கூட ஓபிஎஸ் உடனே பயணித்தார் மைத்ரேயன்.

இந்நிலையில், ஓபிஎஸ் அணியினருடன் எல்லா ஆலோசனைகளிலும் கலந்து கொண்ட மைத்ரேயன், திடீரென எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறினார். பின்னர் 108 நாட்கள் கழித்து நேற்றைய தினம் மீண்டும் ஓபிஎஸ் அணிக்கு தாவினார் மைத்ரேயன். நேற்றைய தினம் சென்னை எழும்பூரில் மாற்றுக் கட்சியினர் ஓபிஎஸ் அணியில் இணையும் விழாவில் மைத்ரேயனும் இணைந்தார்.

அப்போது அவர் கூறுகையில், “அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியை வழிநடத்தும் திறமை ஓபிஎஸ்ஸுக்கு மட்டும்தான் உள்ளது. எனக்கு உடல்நிலை சரியில்லாத போது ஓபிஎஸ் தொலைபேசியில் அழைத்து என்னை விசாரித்தார். பழனிசாமி அணியில் சேர்ந்த 108 நாட்களில் நான் மீண்டும் ஓபிஎஸ் அணிக்கு திரும்பியுள்ளேன் என்றார்.

இந்த நிலையில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுகவின் கொள்கை – குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சி கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், முன்னாள் எம்பி மைத்ரேயன் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியின் உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.