அகமதாபாத்: குஜராத் பேரவை தேர்தலில் ஆம்ஆத்மி சார்பில் போட்டியிட உள்ள 29 பேரின் பெயர்கள் வெளியான நிலையில், தற்போது காங்கிரஸ் சார்பில் 900 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். குஜராத் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. மாநிலத்தின் 182 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகக் கூறி, ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இதுவரை 29 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை அக்கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது.
அதேபோல் ஆளும் பாஜகவிலும் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு நூற்றுக்கணக்கானோர் முட்டி மோதி வருகின்றனர். இந்நிலையில் முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பம் தெரிவித்து 900 பேர் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் தங்கள் வேட்புமனுவுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். இந்த மாத இறுதியில் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 50 வேட்பாளர்களை இறுதி செய்ய உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘சட்டமன்றத் தொகுதி, பாலினம், வயது, கல்வித் தகுதி, கட்சிப் பணி, பதவி உள்ளிட்ட 14 கேள்விகள் அடங்கிய வேட்பு மனு விண்ணப்பம் தயார் செய்யப்பட்டுள்ளது.
அவை விண்ணப்பதாரரின் பயோடேட்டாவில் இடம்பெற வேண்டும். சரியான வேட்பாளரை கட்சித் தலைமை தேர்வு செய்யவே, இதுபோன்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. சிட்டிங் எம்எல்ஏக்கள் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர். இதுவரை 900 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்தலுக்கான அதிகாரபூர்வ அட்டவணை அறிவிக்கப்பட்டதும், தேர்தலில் போட்டியிடக் கூடியவர்கள் தங்களின் சுயவிவரங்களை சட்டசபை தொகுதி பொறுப்பாளர் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்’ என்றனர்.