“ஆளுநர், பிரதமர் திருக்குறளைப் பற்றி பேசுவது தமிழ் மொழிக்கு பெருமையாக உள்ளது” – ஆர்.பி.உதயகுமார்

மதுரையிலுள்ள காந்தி அருங்காட்சியக வளாகத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் சுத்தம் செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், “இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க கழக பொன்விழா ஆண்டையொட்டி தேசத்தந்தை மகாத்மா காந்தியின் அருங்காட்சியக வளாகத்தை அம்மா பேரவை சார்பில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். 

ஆர்.பி.உதயகுமார்

கடந்த 2017-ஆம் ஆண்டு எடப்பாடியார் ஆட்சியில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நாட்டிலயே தூய்மையான கோயிலாக தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசிடம் விருது பெற்றது.

அதனைத் தொடர்ந்து 2020 -2021 ஆம் ஆண்டில் தூய்மை நகரங்களாக வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியும், சென்னை மாநகராட்சியும் தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது பெற்றது.

தற்போது தூய்மையான நகரங்கள் என்ற திட்டத்தில் 45 நகரங்களில் சென்னை 44-வது இடமும், மதுரை 45- வது இடம் பெற்று கடைசியாக வந்துள்ளது. இது நமக்கு கவலை அளிக்கிறது.

தூய்மை இந்தியா திட்டத்தில் தமிழகம் கடைசி இடம், ஆனால், தற்கொலை சம்பவங்களில் இரண்டாவது இடம் என தமிழகம் மோசமான நிலையில் உள்ளது.

தூய்மைப் பணியில்

தூய்மைப் பணியை அரசு செய்தாலும், அம்மா பேரவை போன்ற அமைப்புகளும் முன்மாதிரியாக இருந்து இது போன்ற பணிகளுக்கு விழிப்புணர்வை இளைஞர்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து இதுபோன்ற தூய்மைப் பணிகள் கோயில், கல்லூரி, பள்ளி, பொதுவளாகங்களில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும்.

ஆன்லைன் தடை சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில், முதன் முதலில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை எடப்பாடியார் கொண்டு வந்தார். அந்த அடிப்படையில் தற்போது தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து அதிகமான உயிர்கள் பறிபோய் உள்ளன. மீண்டும் அந்த நிலை வரக்கூடாது.

தென் மாவட்டங்களில் சிறார்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இதுவரை 6,064 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தற்கொலை சம்பவங்களில் மகாராஷ்டிராவிற்கு அடுத்து  தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

முதலமைச்சர் வடகிழக்கு பருவமழையை ஆய்வு செய்து 80 சகவிகிதப் பணிகள் நிறைவுற்றதாக அறிவித்துள்ளார். ஆனால் இதுவரை 30 முதல் 40 சகவிகித பணிகள்தான் நடைபெற்றுள்ளன.

தூய்மைப்பணி

ஏற்கனவே தென்மேற்கு பருவ மழையில் நமக்கு கூடுதலாக 40 சதவிகித மழை பொழிவு இருந்தது. தற்போது வடகிழக்கு பருவ மழை கூடுதலாக மழை கிடைக்கும், ஆகவே மழையை உயிரிழப்பு இல்லாமல், கஜா புயல் போன்ற பேரிடர் காலங்களை எடப்பாடியார் எப்படி கையாண்டாரோ அதேபோல் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

போதை பொருள்கள் அனைத்து இடங்களிலும் அதிகரித்து வருகின்றன, அரசு நடவடிக்கை போதுமானதாக இல்லை. மின்னல் வேட்டையில் ஒரே நாளில் 133 ரெளடிகளை பிடித்தோம் என்று காவல்துறை கூறினாலும் சட்டம் ஒழுங்கு  இன்னும் கேள்விக்குறியாக உள்ளது.

தமிழக ஆளுநர் மற்றும் பிரதமர் திருக்குறளைப் பற்றி பேசுவது தமிழ் மொழிக்கு பெருமையாக உள்ளது. ஆனால், சிலர் இதில் விமர்சனம் செய்து விளம்பரம் தேடி வருகின்றனர். இதை விமர்சனம் செய்பவர்கள் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது, கல்வி வழங்குவது, தொழில் நிறுவனங்கள் தொடங்குவது, தனிநபர் வருமானத்தை உயர்த்துவது, வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்துவது என்று அங்கு கவனம் செலுத்த வேண்டும்.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.