மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை கட்டாய மொழியாக்க வேண்டும் என்ற பரிந்துரையை திரும்பப்பெற வேண்டும் என்று பாமக தலைவர்
வலியுறுத்தியுள்ளார். அதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, எய்ம்ஸ் மருத்துவக் கல்வி நிறுவனம், ஐஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய அரசு உயர்கல்வி நிலையங்களிலும், கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசு பள்ளிகளிலும் இந்தியை கட்டாய பயிற்று மொழியாக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்திருக்கிறது. பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் வாழும் இந்தியாவில் ஒற்றை மொழியை மட்டும் திணிக்க முயல்வது அதிர்ச்சியளிக்கிறது.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் 11வது தொகுப்பில் இந்த பரிந்துரை இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை கட்டாய மொழியாக்க வேண்டும், அதாவது மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் இந்தியில் மட்டும் தான் நடத்தப்பட வேண்டும். இந்தியில் பணி செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் இந்தியாவை இந்தி நாடாக மாற்றுவதற்கான முயற்சியாகவே தோன்றுகிறது. இது சரியல்ல.
இந்தியா தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்தியா தான் பல்வேறு பண்பாடுகள், மொழிகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்தும் ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக திகழும் நாடு. இந்த சிறப்புகள் அனைத்துக்கும் காரணம் இந்திய மக்கள் அனைவரும் வழங்கப்பட்டிருக்கும் மொழி மற்றும் கலாச்சார சுதந்திரம் தான். அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் இந்த சுதந்திரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு விடும். இந்தியாவின் பெருமைகளாக கருதப்படும் ஒருமைப்பாடு, மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை ஆகியவை பாதிக்கப்படக்கூடும்.
இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு எந்த வகையிலும் பாதிப்பு நேர மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது. இந்தியாவின் அனைத்து மொழிகளும் சம அளவில் மதிக்கப்பட வேண்டும். அதை உறுதி செய்வதற்காக அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு அளித்த பரிந்துரையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இந்தியாவின் எட்டாவது அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் இந்தியாவின் அலுவல் மொழியாக அறிவிப்பதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.