ஹைதராபாத்: இந்தியாவில் சாலையோர நாய்களுக்கு இருக்கும் மரியாதை கூட முஸ்லிம்களுக்கு இல்லை என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி பேசியுள்ளார். குஜராத்தில் கார்பா நிகழ்ச்சியின் போது கல் வீசியதாக போலீஸார் சிலரை தாக்கினர். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
அதனைச் சுட்டிக் காட்டிப் பேசிய ஓவைசி, “எப்போதெல்லாம் நாட்டில் பாஜக ஆட்சி நடக்கிறதோ அப்போதெல்லாம் முஸ்லிம்கள் ஒரு திறந்த சிறையில் தான் இருக்கிறோம். மதரஸாக்கள் கூட தரைமட்டமாக்கப்படுகின்றன. இங்கு தெரு நாய்களுக்கு இருக்கும் மரியாதை கூட முஸ்லிம்களுக்கு இல்லை. பிரதமர் நரேந்திர மோடி அவர்களே குஜராத் சம்பவத்தை அறிந்தும் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள். இதுதான் எங்களுக்கான மாண்பா? நீங்கள் குஜராத்தைச் சேர்ந்தவர் தானே.. நீங்கள் இங்கு முதல்வராகவும் இருந்துள்ளீர்கள். உங்கள் மாநிலத்தில் முஸ்லிம்கள் ஒரு கம்பத்தில் கட்டிவைத்து அடிக்கப்படுகிறார்கள். சுற்றி நிற்கும் கூட்டம் அதைப் பார்த்து விசிலடித்து உற்சாகமடைகிறது. தயவு செய்து நீதிமன்றங்கள், போலீஸ் படைகளை எல்லாம் கலைத்துவிடுங்கள்” என்று கூறியுள்ளார்.
முஸ்லிம்கள் மக்கள் தொகை அதிகரிக்கவில்லை: தசரா விழாவை ஒட்டி நாக்பூர் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் நடந்த விழாவில் பேசிய மோகன் பாகவத், “இந்தியாவின் தற்போதைய தேவை மக்கள் தொகை கட்டுப்பாட்டுச் சட்டமும் மதம் சார்ந்த சமமற்ற நிலையைத் தடுத்து கட்டாய மதமாற்றத்தைத் தடுப்பதுமே ஆகும். இவை இரண்டும் அசட்டை செய்யாமல் உடனே கவனிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் மதம் சார்ந்து மக்கள் தொகையில் சமமற்ற நிலை உருவாகினால் அது தெற்கு சூடான், கொசோவோ நாடுகளில் ஏற்பட்ட நிலையை உருவாக்கும்.
மக்கள் தொகை அதிகரிப்பதற்கு ஏற்ப வளங்களும் தேவை. வளங்களைப் பெருக்கும் நடவடிக்கை எடுக்காமல் மக்கள் தொகை அதிகரிப்பதை அனுமதித்தால் அது சுமையாக மட்டுமே உருவாகும். ஆனால் அதே வேளையில் மக்கள் தொகை மிகப்பெரிய சொத்தாகவும் கருதப்படுகிறது. மக்கள் தொகை கொள்கையை வகுத்தால் தான் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும். மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு பூகோல ரீதியாகவும் எல்லைப் பிரச்சினைகளை உருவாக்கும். இவைதவிர கட்டாய மதமாற்றமும், ஊடுருவலும் பெரும் பிரச்சினையாக இருக்கிறது” எனப் பேசியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ஹைதராபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஓவைசி, “தேசிய குடும்ப நல ஆய்வறிக்கை ஐந்தின்படி இந்தியாவில் முஸ்லிம்களின் மொத்த இனவிருத்தி விகிதம் அதிகளவில் சரிந்துள்ளது. இந்தியாவில் முஸ்லிம்கள் தான் அதிகளவில் காண்டம் பயன்படுத்துகின்றனர். முஸ்லிம் குடும்பங்களில் இரு பிள்ளைகளுக்கு இடையேயான இடைவெளி அதிகரித்துள்ளது. பிள்ளைகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதைப்பற்றியெல்லாம் ஏன் பாகவத் பேசவில்லை” என்றார்.