புதுடெல்லி: இந்துக்கள் மற்றும் இந்துத்துவாவை டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலும் அவரது சகாக்களும் வெறுப்பதற்கான காரணத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
டெல்லியில் அண்மையில் தலித் சமூகத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் புத்த மதத்துக்கு மாறுவதாக உறுதிமொழி எடுத்தனர். அந்த உறுதி மொழியில் இந்து கடவுள் நம்பிக்கைக்கு எதிராக டெல்லி சமூக நலத் துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் உறுதிமொழியை படிக்க, அதை மதம் மாறிய தலித்கள் திருப்பி கூறினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, அவர் பதவி விலக வேண்டும் என பாஜக வலியுறுத்தியது. அமைச்சர் கவுதமின் கருத்து, இந்துக்கள் மீது ஆம் ஆத்மி கட்சிக்குள்ள வெறுப்பை காட்டுகிறது என்றும் பாஜக கூறியது.
இதையடுத்து அமைச்சர் கவுதம் அளித்த விளக்கத்தில், “நான் தனிப்பட்ட முறையில் அனைத்து தெய்வங்களையும் மதிக்கிறேன். நான் எனது செயலின் மூலமோ அல்லது வார்த்தைகள் மூலமோ எந்த தெய்வத்தையும் அவமதிக்க வேண்டும் என கனவிலும் நினைத்ததில்லை” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது ட்விட்டர் பதிவில், “இந்துக்கள் மற்றும் இந்துத்துவாவை டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலும் அவரது சகாக்களும் ஏன் இந்த அளவு வெறுக்கிறார்கள் என்பதற்கான காரணத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ராகுல் காந்தி வெறுப்பதற்கான காரணத்தை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் கேஜ்ரிவால் விஷயத்தில் இது புரியவில்லை” என்று கூறியுள்ளார்.