வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டெஹ்ரான்: ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வரும் நிலையில், அந்நாட்டு அரசு டிவி சில நிமிடங்கள் முடக்கப்பட்டது.
ஈரான் நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் கடுமையான தண்டனை உண்டு. இந்நிலையில் குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரை சேர்ந்த 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் கடந்த 13ம் தேதி தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார். அப்போது தலைப்பகுதியை ஹிஜாப்பால் முழுமையாக மறைக்கவில்லை என கூறி அவரை போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்து இறந்தார். உயிரிழந்த மாஷா அமினிக்கு ஆதரவாக போலீசாரை கண்டித்து அந்நாட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த போராட்டத்தை ஆதரித்து வரும் டிஜிட்டல் போராட்டக்காரர்கள், ஈரான் அரசின் டிவியின் நேரடி ஒளிபரப்பை சில நிமிடங்கள் முடக்கினர். அந்நாட்டு நேரப்படி இரவு 9 மணியளவில், ஈரான் மதத்தலைவர் அயத்துல்லா அலி காமெனி கலந்து கொண்ட கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்த போது, சில நிமிடங்கள் முடக்கப்பட்டது. ஈடலட் இ அலி என்ற அமைப்பு இந்த முடக்கத்திற்கு பொறுப்பேற்றுள்ளது. அப்போது, உயிரிழந்த அமினியின் படமும், போராட்டத்தில் உயிரிழந்த 3 பெண்களின் படமும் சில நிமிடங்கள் திரையில் காட்டப்பட்டன. தொடர்ந்து எங்களது இளைஞர்களின் ரத்தம் உங்களின் கைகளில் உள்ளது. எங்களுடன் சேர்ந்து போராட வாருங்கள். அயதுல்லா காமெனெய், ஈரானை காலி செய்துவிட்டு வேறு நாட்டிற்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது போன்ற வாசகங்களும் காட்டப்பட்டன.
அரசுக்கு எதிரான புரட்சி குழுக்கள், டிவி ஒளிபரப்பை சில நிமிடங்கள் முடக்கியதை அந்நாட்டு செய்தி நிறுவனங்களும் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகிவருகிறது. இது குறித்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement