எங்கள் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இல்லாமல் காங்கிரசின் புதிய தலைவர் சுதந்திரமாக செயல்படுவார்: பாஜ.வுக்கு ராகுல் காந்தி பதிலடி

பெங்களூரு:  ‘புதிய காங்கிரஸ் தலைவர் ரிமோட் கன்ட்ரோலாக இருக்க மாட்டார்,’ என்று பாஜவுக்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்து உள்ளார். நாட்டின்  ஒற்றுமையை வலியுறுத்தி பாதயாத்திரை நடத்தி வரும் ராகுல்காந்தி, கர்நாடகாவில் நேற்று 7வது நாளாக தனது நடை பயணத்தை துமகூரு மாவட்டம், கொரட்டிகெரே  தாலுகாவில் தொடங்கினார். கொரட்டிகெரே நகரில் நேற்றி மதியம் அவர் அளித்த பேட்டி வருமாறு: காங்கிரஸ்  கட்சிக்கு தலைவரை ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தல் நடக்கிறது. இதில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இருவரும் கட்சியின் மூத்த  தலைவர்கள், நல்ல அனுபவம் பெற்றவர்கள், நிர்வாக திறன் மிக்கவர்கள். இதில்  யார் தலைவராக தேர்ந்தெடுத்தாலும் தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து  கட்சியை வழி நடத்தும் ஆற்றல் கொண்டவர்கள் என்பதில் மாற்று கருத்தில்லை. தேர்தலில்  போட்டியிடும் இருவரில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை எங்கள் குடும்பம்  தீர்மானிக்காது. தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளவர்கள்  தான் தீர்மானிப்பார்கள். தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்கள் சுதந்திரமாக செயல்படுவார்களே தவிர, சில பாஜ தலைவர்கள் சொல்வது போல், எங்கள் குடும்பத்தின் ரிமோட் கன்ட்ரோலில் செயல்பட மாட்டார்கள்.

கட்சியின் யாருடைய ஆதிக்கமும் இருக்கக் கூடாது என்பதற்காக தான் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தி  தலைவரை தேர்ந்தெடுக்கிறோம். ஒன்றியத்தில் ஆளும் பாஜ அரசு, ஒரே நாடு, ஒரே மொழி என்ற கொள்கைபடி இந்தி மொழியை திணிப்பதும், சிறுபான்மை வகுப்பினரின் உரிமைகள் பறிக்கும் வகையில், இந்து மதத்திற்கு முன்னுரிமை கொடுப்பதின் மூலம்  அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கியுள்ள உரிமைகளை பறிக்கும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.