குழந்தையின்மை பிரச்னை இளம் தம்பதிகள் தற்போது மத்தியில் அதிகரித்து வருகிறது. விளைவு, எந்தெந்த உணவுகளைச் சாப்பிட்டால் விந்தணுக்கள் வீரியமாக இருக்கும் என்று பலரும் தேடி வருகிறார்கள். விகடன் டாட் காம் வாசகர்கள் சிலரும் இந்தக் கேள்வியை நமக்கு மெயில் செய்திருந்தார்கள். அவர்களுக்கு பதில் சொல்கிறார், மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி.
“எந்தெந்த உணவுகள் சாப்பிட்டால் விந்தணுக்கள் வீரியமாக இருக்கும் என்பதைச் சொல்வதற்கு முன்னால், அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல் ஒன்று இருக்கிறது. ஆணுறுப்பும் விந்தணுக்களும், கண், காது போல உடம்பின் ஒரு பகுதிதான். ஓர் ஆணின் ஆரோக்கியத்துக்கு எவையெல்லாம் நன்மை செய்யுமோ, அவை விந்தணுக்களின் வீரியத்துக்கும் நன்மையே செய்யும். `இல்ல டாக்டர், நீங்க உணவுகளோட பெயர்களைச் சொல்லிடுங்க’ என்றால், காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள், சிக்கன், மட்டன், மீன், முட்டை என்று உங்கள் உணவு சரிவிகிதமாக இருந்தால், விந்தணுக்கள் வீர்யமாக இருக்கும்.
லேட் நைட்டில் இரவு உணவு எடுத்துக் கொள்ளும் பழக்கம், அதிலும் ஜீரணிப்பதற்குக் கடினமான உணவுகளைச் சாப்பிடும் பழக்கம் இன்றைய இளைஞர்களிடம் அதிகரித்திருக்கிறது. இது தவறு. மதிய உணவை ஒரு மணியிலிருந்து 2 மணிக்குள் சாப்பிட்டு விட வேண்டும். இரவு உணவை 7.30-க்குள் சாப்பிட்டு விட வேண்டும்” என்றவர், ஜீன்ஸ் பேன்ட் ஆண்களின் விதைப்பைகளை நிச்சயம் பாதிக்கும் என்று எச்சரிக்கிறார்.
“ஆணுடைய விதைப்பைகள், அவருடைய உடம்பின் வெப்பநிலையைவிட 3 அல்லது 4 டிகிரி செல்ஷியஸ் அளவு குறைவாக இருக்க வேண்டும். ஜீன்ஸ் துணி மிகவும் தடிமனாக இருக்கிறது. அதையும் இளைஞர்கள் ஃபேஷனுக்காக இறுக்கமாக அணிந்து கொள்கிறார்கள். எந்தளவுக்கு இறுக்கமாக அணிகிறார்கள் என்றால், என்னிடம் சிகிச்சைக்கு வருகிற இளைஞர்கள் பரிசோதனைக்காக ஜீன்ஸ் பேன்ட்டை அகற்ற வேண்டுமென்றால் பத்து நிமிடம் எடுத்துக் கொள்கிறார்கள்.
சற்று தளர்வாகவாவது போடலாமே… ஜீன்ஸ் துணியாலான உடைகள் குளிர் மிகுந்த நாடுகளில் வசிப்பவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். ஆனால், தமிழ்நாடு போன்ற பெரும்பாலும் வெப்பமான பருவநிலை கொண்ட மாநிலங்களில் வசிப்பவர்கள் ஜீன்ஸ் ஆடைகளை அணிந்தால், உடம்பின் சூடு அதிகமாகிக் கொண்டே செல்லும். விளைவு விதைப்பை சரியாகச் செயல்படாமல் போகும். கூடவே விந்தணுக்கள் உற்பத்தியும் பாதிக்கப்படும். தவிர, புகைபிடிப்பவர்களுக்கும் மது அருந்தும் பழக்கம் இருப்பவர்களுக்கும் விந்து உற்பத்தி பாதிக்கப்படும்” என்றார் டாக்டர் நாராயண ரெட்டி.