மாஸ்கோ: ரஷ்யாவுடன் தீபகற்ப பகுதியான கிரீமியா இணைக்கப்பட்ட பின்னர், ரஷ்ய அதிபர் புதின் புதிய பாலம் ஒன்றை உருவாக்க உத்தரவிட்டார். இந்த பாலம் 2018-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. கெர்ச் ஜலசந்தியின் குறுக்கே 19 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைந்த இந்த பாலமானது ரஷ்யாவின் முக்கிய நிலப்பரப்புடன் கிரீமியாவை இணைக்கிறது.
இந்த பாலத்தில் ரயில்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்வதற்கு என இரு பிரிவுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், உக்ரைனின் 4 நகரங்களை ரஷ்யா தன்னுடன் இணைத்து கொண்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்த பாலத்தின் மீது உக்ரைன் கடும் தாக்குதலை நடத்தியுள்ளது.
இதுகுறித்து ரஷ்ய தீவிரவாத ஒழிப்பு குழு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், ‘‘ரஷ்யாவுடன் கிரீமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தில், லாரியில் வெடிமருந்து ஏற்றிச் செல்லப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இதில், வாகன பிரிவில் உள்ள சாலை சேதமடைந்தது. ரயில்வே தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் தீப்பற்றியது. அந்த பாலத்தில், ரயில் மற்றும் வாகன போக்குவரத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கெர்ச் ஜலசந்தி பகுதியில் ரஷ்யாவை கிரீமியாவுடன் இணைக்கும் பாலத்தில் நேற்று வெடிகுண்டு நிரப்பிய லாரி மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. தீப்பற்றி எரியும் பகுதியில் தண்ணீரை ஊற்றி அணைக்கும் பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர். படம்: பிடிஐ