ராஞ்சி: நாட்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தில்தான் அதிகளவில் குழந்தைகள் திருமணங்கள் நடப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குழந்தை திருமணங்கள் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் ஆய்வு நடத்தியது. இதில், நாட்டில் அதிக குழந்தை திருமணம் நடக்கும் மாநிலமாக ஜார்கண்ட் உள்ளது. இம்மாநிலத்தில் குழந்தை திருமணம் செய்து கொள்ளும் பெண்களின் சதவீதம் 5.8 ஆக உயர்ந்துள்ளது. தேசியளவில் குழந்தை திருமணங்கள் செய்து கொள்ளும் பெண்களின் சதவீதம் 1.9 சதவீதமாகும்.
ஜார்கண்டில், குழந்தை திருமணங்கள் கிராமப்புறங்களில் 7.3 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் மூன்று சதவீதமாகவும் உள்ளன. ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் 21 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்கின்றனர். மேற்கு வங்கத்தில் 54.9 சதவீத பெண்கள் 21 வயதை அடைவதற்கு முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள். ஜார்கண்டில் இந்த எண்ணிக்கை 54.6 சதவீதமாக உள்ளது. இதன் தேசிய சராசரி 29.5 சதவீதமாக உள்ளது.