“கொடநாடு வழக்கில் குற்றவாளிகளை பிடித்து கொடுத்ததே அதிமுக தான்” – எடப்பாடி பழனிசாமி

சேலம், ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், “கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது அ.தி.மு.க., அரசுதான். இந்த வழக்கில் உள்ளவர்கள் மீது கேரளாவில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர்கள் அனைவரும் கொடும் குற்றவாளிகள். அதிமுக-வுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காகவே வேண்டுமென்றே திட்டமிட்டு இப்போது அவதூறு பரப்பி வருகிறார்கள்.

மேலும் இந்த வழக்கினை விசாரணை செய்துவந்த தனிப்படை போலீஸாருக்கு ஆதாரம் ஒன்றும் கிடைக்காததால், தற்போது சிபிசிஐடி பிரிவுக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை காலம் தாழ்த்துவதற்காக செய்வதாக கருதுகிறோம்.” என்றார்.

எடப்பாடி பழனிசாமி

“ஜேசிடி.பிரபாகர் 41 ஆயிரம் கோடி ரகசியத்தை வெளியிட உள்ளதாக கூறியிருக்கிறாரே” என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அவர் இன்னும் கட்சி வேட்டியே கட்டாதவர். அவர் அதிமுக கட்சிக்காரன் என்று சொல்வதற்கே அருகதை இல்லாதவர். வேடந்தாங்கல் பறவைப்போல பல கட்சிகளுக்கு சென்று வந்தவர். சீசனுக்கு சீசன் கட்சி மாறுபவர் அவருடைய பேச்சு விடிஞ்சா போச்சு என்றுதான் எடுத்துக்கொள்கிறோம்.” என்றார்.

`2 முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் நாங்கள் தெரிவித்ததால்தான் ரெய்டு நடந்தது’ என்று கோவை செல்வராஜ் தெரிவித்திருப்பது குறித்து கேட்டப்போது, எடப்பாடி, “அவருக்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. அவருக்கு அதிமுக வரலாறு தெரியுமா? யார், யாரெல்லாம் வேறுகட்சியில் இருந்து வருகிறார்களோ அவர்கள் தான் கட்சியின் மீது அவதூறு பரப்பி வருகின்றனர். செல்வராஜூம், ஜேசிடி.பிரபாகரனும் கட்சிக்கு விசுவாசமில்லாதவர்கள். கட்சிக்குள் இருந்தே அதிமுக-வுக்கு குடைச்சல் கொடுத்து வருகின்றனர்.

அதனால் அவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்கள் போன்றுள்ளவர்களை ஆராய்ந்து களை எடுத்து வருகின்றோம். எங்களுக்கு யாரையும் பார்த்து பயமில்லை. காரணம் எங்கள் மடியில் கனமில்லை|” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.