கொழும்பு, ஷங்க்ரிலா ஹோட்டலில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் சஹ்ரான் குழுவின் முக்கியஸ்தர்கள் மூவருக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாசிமின் மனைவி பாத்திமா ஹாதியா, முஹம்மது அமீர் முஹம்மது ஆயத்துல்லா, முஹம்மது மஸ்னூக் ரிலா ஆகியோருக்கு எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
சஹ்ரான் ஹாசிம் குழுவின் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இலங்கையிலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.
வழக்குத் தாக்கல்
இந்நிலையில் கொழும்பு ஷங்க்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இதன்போது பாத்திமா ஹாதியா, அமீர் எம். ஆயத்துல்லா, அசாருத்தீன் இல்மி, அப்துல் ஹமீத் ரிபாஸ், முபாரக் எம் றிபாயிஸ் மற்றும் ரிலா ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டன.
இவர்களில் ரிலாவைத் தவிர ஏனையோருக்கு எதிராக இதே குற்றச்சாட்டில் உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
விளக்கமறியல் நீடிப்பு
இந்நிலையில் குறித்த வழக்கை தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதா? இல்லையா? என்பது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்கள ஆலோசனையை பெற்றுக்கொள்ள இருப்பதாக கோட்டை நீதவான் நீதிபதி திலிண கமகே தெரிவித்துள்ளார்.
குறித்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் நேரடியாக முன்னிலைப்படுத்தப்படாமல் ஸ்கைப் தொழில்நுட்பம் ஊடாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து சட்ட மா அதிபர் திணைக்கள அறிவுறுத்தல் கிடைக்கும் வரை சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.