சித்தரேவு- பெரும்பாறை மலைச்சாலையில் சரியும் நிலையில் உள்ள பாறைகளால் விபத்து அபாயம்: அதிகாரிகள் கவனிப்பார்களா?

பட்டிவீரன்பட்டி: சித்தரேவு- பெரும்பாறை மலைச்சாலையில் சரியும் நிலையில் பாறைகளால் விபத்து அபாயம் நிலவுகிறது. பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவு- பெரும்பாறை இடையே 15 கிமீ தூர மலைச்சாலை உள்ளது. இந்த மலைச்சாலை ஆபத்தான பள்ளத்தாக்குகள் மற்றும் வளைவுகள் நிறைந்ததாகும். இந்த மலைச்சாலை வழியாக 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள், பொதுமக்கள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் என பலர் தினமும் வாகனங்களில் சென்று வருகின்றனர்.

மேலும் இந்த சாலை 40க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலையாகும். சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் இந்த சாலையோரத்தில் தடுப்புச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள முருகன் கோயில் அருகே ஆலமரம் என்ற பகுதியில் அந்தரத்தில் தொங்கியபடி இரண்டு பாறைகள் உள்ளன. மண் அரிப்பு ஏற்பட்டு, உறுதி தன்மையின்றி உள்ள இந்த பாறைகளின் மேல் மலைச்சாலை மற்றும் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் அருகில் சுமார் 200 அடி ஆழமுள்ள பள்ளம் உள்ளது.

விரைவில் மழைக்காலம் துவங்கவுள்ள நிலையில் 2 பாறைகளும் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அந்தரத்தில் தொங்கியபடி உள்ள பாறைகளை அகற்றி மலைச்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.