பெங்களூரு: கர்நாடகாவில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினருக்கான இடஒதுக்கீடு 24 சதவீதமாக உயர்த்த முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் வாழும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினரின் தற்போதுள்ள இட ஒதுக்கீட்டை உயர்த்துவது தொடர்பாக ஓய்வு பெற்ற கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகமோகன்தாஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு ஆய்வு செய்து அரசிடம் கொடுத்த அறிக்கையில், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 15 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாகவும், பழங்குடியின வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 3 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும் உயர்த்த வேண்டும் என்று பரிந்துரை வழங்கியது.
இந்நிலையில், பெங்களூருவில் நேற்று முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை 15 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாகவும் பழங்குடியின வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 3 சதவீதத்தில் இருந்து 7 சதவீதம் என, இதுவரை இவர்களுக்காக இருந்த 18 சதவீத இடஒதுக்கீட்டை 24 சதவீதமாக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டம் முடிந்த பின் அமைச்சர் மாதுசாமி கூறுகையில், `தமிழக அரசின் 69 சதவீதம் இடஒதுக்கீடு கொள்கைக்கு உச்ச நீதிமன்றத்தால் தடை விதிக்க முடியவில்லை. அதே வழியை கர்நாடகா அரசு பின்பற்றியுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய அரசின் கவனத்திற்கும் மாநில அரசு கொண்டு செல்லும்,’ என்றார்.