சென்னை: திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ : ஜனநாயக முறைப்படி இந்தியாவில் உள்ள மற்ற எல்லா அரசியல் கட்சிகளுக்கும் முன்மாதிரியாக, இலக்கணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தலைமையேற்று நடத்தி வரும் முதலமைச்சர், சகோதரர் மு.க.ஸ்டாலின், மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவர் ‘மென்மேலும் வெற்றிபெற இதயபூர்வமாக வாழ்த்துகிறேன். மேலும் பல்லாண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக வழிநடத்திச் செல்ல வேண்டி விழைகிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ் : திமுகவின் தலைவராக மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள். தந்தையைப் போல கட்சியை சிறப்பாக வழி நடத்திச் செல்லவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
விசிக தலைவர் திருமாவளன் : தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி இந்திய நாட்டுக்கே கருத்தியல் அடிப்படையிலான பேரிடர் சூழ்ந்துள்ள நிலையில், திமுக தலைமை பொறுப்பை ஏற்கிற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தேசிய அளவில் ‘சமூகப் பொறுப்பு’ உருவாகியுள்ளது. குறிப்பாக, சனாதன சங்பரிவார்களின் ‘சமூகப் பிரிவினைவாதப்’ போக்குகளை முறியடிக்க வேண்டிய கடமை உள்ளது. அதாவது இந்திய அளவில் சனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. எனவே தேசிய அளவில் செயல்திட்டங்களை வரையறுத்து இயங்கிட வேண்டுமெனவும் அரசமைப்புச்சட்டம் மற்றும் சனநாயகத்தைப் பாதுகாத்திட அவர் முன்வர வேண்டுமெனவும் வாழ்த்துகிறேன்.
இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் : திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மு.க ஸ்டாலின் இரண்டாம் முறையாக, ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. நாடு எதிர்நோக்கும் தலைவராக உயர்ந்துள்ள மு.க.ஸ்டாலின், வகுப்புவாத, மதவெறி, சாதிவெறி,. சனாதான பழைமைவாத சக்திகளிடமிருந்தும், பன்னாட்டு கார்ப்ரேட் சக்திகளின் நிதிமூலதன ஆக்டோபஸ் கரங்களிலிருந்தும் இந்திய ஒன்றியத்தை மீட்டு பாதுகாக்க, மதச் சார்பற்ற, சமூகநீதி சார்ந்த ஜனநாயக மாற்றை கட்டமைத்து, வெற்றி காண விழைந்து, இரண்டாம் முறையாக திமுகழகத் தலைவராக பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு , இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்: காவி கும்பல்கள், நாட்டையே தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முயன்று வரும் சூழலில், வட ஆரிய சக்திகளின் ஆதிக்கத்திற்கு, தமிழ் மண்ணில் இடம் இல்லை என்ற முழக்கம், தனது திராவிட, சமூக நீதியின் கோட்பாடுகளால் விண் அதிர வைத்த பெருமை முதல்வரை சாரும். இத்தகைய நிலையில், திமுக தலைவராக 2வது முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி: திராவிட முன்னேற்றக் கழக தலைவராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: திமுகவின் தலைவராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோருக்கும் வாழ்த்துகள். அவர்கள் பணி சிறக்கட்டும்.
இவ்வாறு பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களின் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.