திமுக தலைவர் பதவிக்கு வேறு யாரும் போட்டியிடாததால், மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக திமுக தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், தமிழகம் முழுவதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2,600 பொதுக்குழு உறுப்பினர்கள், 1,500 சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 100 பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பொதுக்குழு கூட்டத்தில் வெளியிடப்பட்டது.
இதேபோல், திமுக துணை பொதுச்செயலாளராக கனிமொழி எம்பி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோரும் திமுக துணை பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
திமுக முதன்மை செயலாளராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார். திமுக தொடங்கப்பட்டபோது அண்ணா தலைவராக இருந்தார். அவர் மறைவுக்கு பிறகு 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ம் தேதி, முதல்முறையாக திமுக தலைவராக கருணாநிதி பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து, 11 முறை இந்த பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். கருணாநிதி மறைவுக்கு பிறகு 2016-ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் திமுக தலைவர் ஆனார். தற்போது அவர் 2-வது முறையாக திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.