உட்கட்சித் தேர்தலின் இறுதிகட்டமாக தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி ‘விங்க்ஸ்’ கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெற்றது. அதில், திமுக தலைவராக 2ஆவது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி அதிகாரப்பூர்வமாக தேர்வானார்.
அதன்பின்னர் அவர் பேசுகையில், “நான் அண்ணாவோ, கலைஞரோ அல்ல என்று தெரிவித்த திமுக தலைவர்
, “பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி அமர்ந்த இடம் இது. ஆனால், நான் அண்ணாவோ, கலைஞரோ அல்ல; கலைஞரால் பாராட்டப்பட்டு தலைவரானவன் நான். கலைஞர் மறைவிற்கு பிறகு இந்த எளியன் தலையில் தலைமை பொறுப்பு சுமத்தப்பட்டது; உழைப்பு, உழைப்பு என பாராட்டப்பெற்றதால் கிடைத்த பொறுப்பு.” என்றார்.
தொண்டர்கள் இருக்கும் தைரியத்தில்தான் இந்த பொறுப்புக்கு வந்துள்ளேன் என குறிப்பிட்ட ஸ்டாலின், கட்சியின் அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் சிலர், ஒன்றன் பின் ஒன்றாக பிரச்சினைகளை உருவாக்கி தனக்கு தூக்கமில்லாத இரவுகளை தருவதாகவும் தெரிவித்தார். கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தங்கள் செயல்களிலும், வார்த்தைப் பிரயோகங்களிலும் கவனமாக இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகள் அரியணையை அலங்கரிக்க வேண்டும் என்பது அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலினின் விருப்பமாக உள்ளது. அதன்படி, ஆட்சி பொறுப்புக்கு வந்ததில் இருந்தே அவர் மிகவும் கவனமுடன் செயல்பட்டு வருகிறார். ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அத்துடன், விமர்சனங்கள் எழும்போதெல்லாம், குறைகள் சுட்டிக்காட்டப்படும் போதெல்லாம் அதற்கு செவி சாய்த்து பொறுப்புடன் முதிர்ந்த அரசியல்வாதியாக அதனை கையாண்டு வருகிறார் ஸ்டாலின்.
அதேசமயம், திமுகவில் அமைச்சர்கள் தொடங்கி கவுன்சிலர்கள் வரை மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை அடுத்தடுத்து நிர்வாகிகள் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். திமுகவின் கடந்த ஆட்சி காலத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் பொதுமக்களிடம் அக்கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தித்தந்தன. அதற்கு முக்கியக்காரணம் அக்கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள். குறுநில மன்னர்களாக வலம் வரும் திமுக மாவட்ட செயலாளர்கள் தொடங்கி கீழ்மட்ட அளவு வரை நிர்வாகிகள் எதேச்சதிகார போக்குகள் ஆட்சி பொறுப்பேற்றதுமே ஸ்டாலினிடம் சுட்டிக்காட்டப்பட்டது. அவரும் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.
ஆனாலும், நிர்வாகிகளின் செயல்பாடுகள் சில சமயங்களில் அவரது கையை மீறியும் சென்று விடுகிறது. உதாரணமாக, கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பெருவாரியான இடங்களில் திமுக வெற்றி பெற்றாலும், அப்போது நடந்த சில விஷயங்கள் ஸ்டாலினுக்கு அதிருப்தியை ஏற்படுத்தின. அந்த சமயத்தில், காத்திரமாக சில அறிக்கைகளையும் அவர் வெளியிட்டார். ஆனால், பலரும் அவரது அறிக்கையை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனிடையே, திமுக உட்கட்சித் தேர்தலின்போதும், ஏராளமான பஞ்சாயத்துகள் நடந்தன. திமுக உட்கட்சித் தேர்தல் சுமூகமாக நடைபெற்று முடிந்துள்ளது என ஸ்டாலின் சொன்னாலும்கூட, களேபரங்களுக்கு மத்தியில்தான் உள்ளாட்சித் தேர்தலும் நடைபெற்று முடிந்துள்ளது.
கட்சி ரீதியாக இதுபோன்ற சம்பவங்கள் என்றால், அரசாங்க ரீதியாக திமுக அமைச்சர்கள் பலரும் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். ராஜ கண்ணப்பன் சாதி ரீதியிலான சர்ச்சையில் சிக்கினார், அமைச்சர் பொன்முடி ஓசி பஸ் சர்ச்சையில் சிக்கியுள்ளார். குறவர் சமூக பிரதிநிதித்துவம் தொடர்பான விவகாரத்தில் வனவேங்கைகள் கட்சித் தலைவர் இரணியனை நிற்க வைத்து ஒருமையில் பேசியதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம்னி பேருந்து கட்டணம் தொடர்பாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், கே.என்.நேரு, துரைமுருகன் உள்ளிட்ட பலரும் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர்.
இதுதொடர்பாக ஸ்டாலின் பலமுறை எச்சரிக்கையும் விடுத்து விட்டார். “எக்காரணம் கொண்டும் சொல்லிலும் செயலிலும் அலட்சியமான போக்கு வேண்டாம். இரண்டையும் கவனத்துடன் கையாளுங்கள். சொற்கள், அதனை வெளிப்படுத்தும் உடல்மொழி, நம்மை நாடி வரும் மக்களை அணுகும் முறை என அனைத்திலும் கவனமுடனும் பொறுப்புடனும் கண்ணியம் துளியும் குறைந்து விடாமல் செயலாற்றுங்கள்.” என அமைச்சர்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார். தவறுகளோ குறைகளோ கவனத்துக்கு வந்தால் நடவடிக்கை எடுக்க சிறிதும் தயங்க மாட்டேன் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், பொதுக்குழு மேடையிலேயே, அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சிலரின் நடவடிக்கைகள் தனக்கு தூக்கமற்ற இரவுகளை தருவதாக ஸ்டாலின் வெளிப்படையாக பேசியது சில அமைச்சர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்குபின்னரும், சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கும் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. “பொதுக்குழு சுமூகமாக நடைபெறவே இத்தனை காலம் ஸ்டாலின் அமைதியாக இருந்தார். இனிமேலும், ஏதாவது நடக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க அவர் தயங்க மாட்டார்.” என்கின்றன அறிவாலய வட்டாரத் தகவல்கள்.