நான் இந்து அல்ல ஆனால்… ராஜமௌலியின் புதிய விளக்கம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பியுமான திருமாவளவனுக்கு எடுக்கப்பட்ட விழா ஒன்றில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், “சினிமா என்னும் கலையை சரியாக நாம் கையாள வேண்டும். அப்படி கையாள தவறும்போதுதான்  நம்முடைய அடையாளம் நம்மிடம் இருந்து பறிக்கப்படுகிறது.  வள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது,ராஜராஜ சோழனை இந்து அரசனாக குறிப்பிடுவது என தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். அவரின் இந்தக் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

குறிப்பாக பொன்னியின் செல்வன் படம் வெளியான சமயத்தில் அவர் இப்படி பேசியதால் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெற்று விவாதத்தையும் கிளப்பியது. ராஜராஜ சோழன் இந்து இல்லாமலா சிவன் கோயிலை கட்டினார் என பாஜக, இந்து முன்னணியினர் கேள்வி எழுப்பினர். அதேசமயம், ராஜராஜ சோழன் காலத்தில் இந்து என்ற மதம் இல்லை சைவம், வைணவம் என்றுதான் இருந்தது என சீமான் உள்ளிட்டோர் பதிலடி கொடுத்தனர்.

இந்தச் சூழலில் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய கமல் ஹாசன், “ ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்பது கிடையாது வைணவம், சைவம், சமணம் என்றுதான் இருந்தது. வெள்ளைக்காரர்கள் எப்படி அழைப்பது என்று தெரியாமல் இந்து என்றார்கள். தூத்துக்குடியை Tuticorin என்று சொன்னதுபோல்” என்றார். அதேசமயம், கமல் இந்து மதத்தின் இருப்பை மறுக்கவில்லை என கூறியதாக அவரது நண்பர் விளக்கமளித்திருந்தார்.

இப்படி நாளொரு கதையாக இந்த விவகாரம் நீண்டுகொண்டிருக்கிறது. நிலைமை இப்படி இருக்க பாகுபலி இயக்குநர் ராஜமௌலி இந்த விவகாரம் குறித்து பேசியிருக்கிறார். அமெரிக்காவின்  லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஒரு திரைப்பட விழாவில் தனது ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்றுள்ள இந்து மதத்தின் சித்தரிப்பு தொடர்பாகவும் பேசினார்.

Ponniyin selvan

நிகழ்ச்சியில் பேசிய அவர், “பலரும் இந்து என்பது மதம் என நினைக்கிறார்கள். அப்படியல்ல; இன்றைய காலக்கட்டத்தில்தான் அது மதம். ஆனால், இந்து மதத்திற்கு முன்பு அது ‘இந்து தர்மமாக’ இருந்தது. இந்து தர்மம் என்பது வாழ்க்கை முறை; அது ஒரு தத்துவம். மதமாக எடுத்துக்கொண்டு பார்த்தால் நான் இந்து அல்ல. அதே சமயம் ‘இந்து தர்மம்’ என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் நான் தீவிர இந்துதான். 

நான் படத்தில் சித்தரிப்பது உண்மையில் பல, பல நூற்றாண்டுகள் மற்றும் யுகங்களாக இருக்கும் ஒரு வாழ்க்கை முறையைத்தான். வாழ்க்கையை எப்படி பார்க்க வேண்டும் என்பதையும், அதனால் வரும் முடிவுகள் குறித்து கவலைப்பட வேண்டாம் என்பதையும் இந்து தர்மம் போதிக்கிறது. எனவே, நான் இந்து தர்மத்தைப் பின்பற்றுகிறேன்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.