புதுடெல்லி: நிலவில் அதிகளவில் சோடியம் இருப்பதை சந்திரயான் 2 விண்கலம் கண்டுபிடித்து, படம் எடுத்து அனுப்பி உள்ளது. இது குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: சந்திரயான்-1 விண்கலம் நிலவில் சோடியம் இருப்பதை கண்டறிந்தது. இது, தற்போது புது கண்டுபிடிப்பிற்கு வழிவகுத்து கொடுத்துள்ளது. இந்தியாவின் சந்திரயான் -2 விண்கலம், முதல் முறையாக நிலவில் உள்ள சோடியத்தின் அளவை கிளாஸ் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் மூலம் வரைபடமாக்கி உள்ளது.
பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்தில் கிளாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர் வடிவமைக்கப்பட்டது. இது, நிலவில் அதிகளவில் சோடியம் இருப்பதை உறுதிப்படுத்தி, படம் பிடித்து அனுப்பி இருக்கிறது. சந்திரயான் -2 ன் இந்த புதிய கண்டுபிடிப்பு, நிலவின் மேற்பரப்பு மற்றும் அதன் தொடர்பு குறித்த ஆய்வுகளை மேலும் விரிவுபடுத்த உதவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.