அறுவடை செய்த நெல்லை அதிகாரிகள் கொள்முதல் செய்ய மறுப்பதால் நஷ்டமடைந்து வருவதாக வாடிப்பட்டி வட்டார விவசாயிகள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.
மதுரை மாவட்டத்தில் நெல் விவசாயம் முதல் பலவகையான பயிர்,காய்கறி, பழ விவசாயம் அதிகம் நடைபெறும் பகுதி வாடிப்பட்டி வட்டாரமாகும்.
இந்நிலையில்தான், நெல் கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்கள் என்று, விவசாயிகள் புகார் எழுப்பி வருகிறார்கள்.
இது குறித்து நம்மிடம் பேசிய விவசாயிகள்,“வாடிப்பட்டி வட்டாரத்தில் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்ட வைகை அணை, தண்ணீர் மூலம் பேரணை முதல், கள்ளந்திரி வரை முதலாவது போகம் நெல் சாகுபடி நிறைவுபெற்று அறுவடை முடிந்துள்ளது. இப்பகுதி விவசாயிகள் நலனுக்காக வாடிப்பட்டி அருகே நீரேத்தானில் அரசு நெல் கொள்முதல் நிலையம் சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது.
அறுவடை முடிந்து கடந்த 10 நாட்களுக்கு மேலாக கொட்டி வைக்கப்பட்ட நெல்லை, அதிகாரிகள் கொள்முதல் செய்யவில்லை. ஏன் என்று கேட்டபோது 17 சதவிகித பதத்துடன் உள்ள நெல்லை மட்டும்தான் கொள்முதல் செய்வோம் என்று கூறுகிறார்கள். எங்கள் பிரச்சனையை காது கொடுத்து கேட்கவில்லை. இவர்கள் கொள்முதல் செய்யாமல் வியாபாரிகளிடம் சென்றால் இன்னும் குறைவான விலைக்கு கேட்பார்கள். இதனால் எங்களுகு பெரிய நஷ்டம் ஏற்படும்” என்றனர்.
இந்த பிரச்சனையால், சமீபத்தில் நீரேத்தான் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானது.
சில விவசாயிகள் வேறு வழியில்லாமல் நெல்லை காய வைப்பதற்காக தனியார் ஆலைகளுக்கு கொண்டு செல்வதால் கூடுதல் செலவாகிறது என்கிறார்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவரை தொடர்பு கொண்டு கேட்டோம், “தவறாக சொல்கிறார்கள். நாங்கள் கொள்முதல் செய்து கொண்டுதான் இருக்கிறோம். விவசாயிகள்தான் மழை வந்துவிடுமோ என அவசரப்பட்டு பச்சையாக நெல்லை அறுவடை செய்து குவித்துள்ளார்கள். அதில் அரிசி சரியாக வராது. மாய்ச்சர் மீட்டரில் 17 சதவிகிதம் இருக்கணும், அவங்க 20 சதவிகித பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய சொல்கிறார்கள். அதை எப்படி எடுப்பது? 17 சதவிகிதம் ஈரப்பதம் இருந்தால்தான் நல்ல அரிசியை ரேசன் கடைக்கு கொடுக்க முடியும். இப்படி புகார் சொல்லும் விவசாயிகள் ரேஷன் கடையில் இதே பதத்திலுள்ள அரிசியை கொடுத்தால் வாங்க மாட்டார்கள். அதனால்தான், அரசு உத்தரவுப்படி 17 சதவிகித பத்ததுடன் காயப்போட்டு கொண்டு வர சொல்லியுள்ளோம். அதனால்தான் தாமதம்” என்றார்.
அதே நேரம், 20 சதவிகித ஈரப்பதம் இருந்தாலும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ள விவசாயிகள், இல்லையெனில் அறுவடை செய்யப்பட்ட நெல்களை சாலையில் கொட்டி போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்து வருகின்றனர்.