டெல்லி மற்றும் நொய்டாவில் அடுக்கு மாடிக்கட்டடங்களில் பணியாற்றும் காவலர்கள் அடிக்கடி தாக்கப்படும் சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் கூட இது போன்ற சம்பவங்கள் நொய்டாவில் நடந்தது. காவலர்கள் கட்டடத்தின் முன் கதவை திறப்பதில் தாமதம் ஏற்பட்டால் உடனே அவர்களை குடியிருப்புவாசிகள் சிலர் தாக்கும் சம்பவங்கள் நடக்கிறது. தற்போது நொய்டாவில் மீண்டும் அது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. நொய்டாவில் செக்டர் 121ல் இருக்கும் அஞ்சாரா ஹோம்ஸ் என்ற கட்டடத்தில் பாதுகாவலராக இருப்பவர் பங்கஜ். இக்கட்டிடத்திற்கு மூன்று பெண்கள் குடிபோதையில் காரில் வந்தனர்.
அவர்களது காரில் அக்கட்டட ஸ்டிக்கர் இல்லை. இதனால் காரை உள்ளே அனுமதிக்க முடியாது என்று பங்கஜ் தெரிவித்தார். இதனால் குடிபோதையில் இருந்த 3 பெண்களும் காவலரை கடுமையான வார்த்தைகளால் திட்டினர். உடனே மற்ற காவலர்களும் அங்கு பிரச்னையை தீர்க்க முயன்றனர். ஆனால் அவர்களையும் அப்பெண்கள் சட்டையை பிடித்து தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து காவலர்கள் போலீஸில் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில் போலீஸார் அப்பெண்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இரண்டு பெண்களுக்கு அபராத செல்லான் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் தப்பிவிட்டார். இது குறித்து கூடுதல் போலீஸ் கமிஷனர் சாத் மியான் கூறுகையில், “அஞ்சாரா ஹோம்ஸ் சொசைட்டியில் காவலர்களிடம் குடிபோதையில் 3 பெண்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டுள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட பெண்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார். குடிபோதையில் பெண்கள் காவலர்களிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.