“போ.., கம்சனின் வழித்தோன்றல்களையும், ஊழல் செய்பவர்களையும் அழித்துவிடு என்று, கடவுள் என்னை அனுப்பியிருக்கிறார்” என்று, வடோதராவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில், ஆளும் பாஜகவுக்கு தாங்கள்தான் போட்டி என்று ஆம் ஆத்மி கட்சி கோதாவில் இறங்கியிருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட அக்கட்சித் தலைவர்கள் அடிக்கடி குஜராத் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில், மதமாற்ற விவகாரத்தை வைத்து ஆம் ஆத்மி கட்சி மீதும், அர்விந்த் கேஜ்ரிவால் மீதும் பாஜகவினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அமைச்சர் ராஜேந்திர பால் கெளதமை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கின்றனர்.
இந்நிலையில், குஜராத் மாநிலம் வடோதராவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்டார். மேலும், “பாஜகவினர் என்னைப் பற்றி தவறாக பேசுகின்றனர். அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், அவர்கள் என்னை வெறுக்கின்றனர்.
கண் மூடித்தனமான அந்த வெறுப்பின் காரணமாக அவர்கள் கடவுள்களைக் கூட அவமதிக்கின்றனர். நான் அனுமனின் பக்தன். அவர்கள் கம்சனின் வழித்தோன்றல்கள். நான் கிருஷ்ண ஜெயந்தி நாளில் பிறந்தவன். கடவுள் ஒரு சிறப்பு நோக்கத்துக்காக என்னை அனுப்பியிருக்கிறார். ‘போ.., கம்சனின் வழித்தோன்றல்களையும், ஊழல் செய்பவர்களையும் அழித்துவிடு’ என்று என்னை அனுப்பியிருக்கிறார்” என்று அவர் கூறினார்.