குவாஹாட்டி: அசாம் மாநிலம் குவாஹாட்டியில் பாஜக சார்பில் புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: 70 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, வடகிழக்கு பகுதிகளை வன்முறை மற்றும் அராஜகத்தை நோக்கி தள்ளியுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின்போது அந்த மாநிலங்களில் வளர்ச்சி சுத்தமாக இல்லை. இந்நிலையில் பாஜக வெற்றி பெற்று இந்த மாநிலங்களில் கூடுதல் திட்டங்களை அமல்படுத்தியது. மத்தியில் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்று பாஜக தனித்து ஆட்சி அமைக்கும் என அப்போது நினைக்கவில்லை. கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் கீழ் வடகிழக்குப் பகுதிகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன.
அசாம், வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பது மகிழ்ச்சியான விஷயம். அசாமில் மட்டும் 9 ஆயிரம் பேர் தங்களது ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரண் அடைந்துள்ளனர். வடகிழக்குப் பகுதிகளின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி, பட்ஜெட்டில் அதிக நிதியை ஒதுக்கி அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர் சர்வானந்த சோனோவால், அசாம் மாநில பாஜக தலைவர் பாபேஷ் கலிதா, திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.