புதுடெல்லி: பாஜக மூத்த தலைவர் உமா பாரதி ம.பி.யை சேர்ந்தவர். துறவியான இவர் தனது இளம் வயதிலேயே பாஜகவில் இணைந்தார். இவரிடம் போபாலின் பாக் செவனியா பகுதி
மக்கள் அங்குள்ள, அரசு அனுமதிபெற்ற ஒரு மதுக்கடை மீது அவ்வப்போது புகார் கூறி வந்தனர். இதனால் கடும் கோபம் கொண்ட உமா பாரதி அக்கடையின் மீது கற்களை வீசி மது பாட்டில்களை உடைத்தார். ம.பி.யில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் எனக் குரல் கொடுக்கத் தொடங்கினார்.
இவரை சமாளிக்க முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கடந்த அக். 2-ம் தேதி, காந்தி ஜெயந்தி நாளில் மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டம் நடத்தினார். இதில், தன்னுடன் பாபா ராம்தேவ், உமா பாரதியையும் மேடை ஏற்றினார். தனது ஆட்சியில் மதுக் கடைகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளபோதிலும் நவ. 30 வரை மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டங்கள் தொடரும் என அறிவித்தார்.
இந்தச் சூழலில் மதுவுக்கு எதிரான தனது பிரச்சாரத்தை உமா பாரதி தீவிரமாக்கியுள்ளார். பாஜக தேசிய துணைத் தலைவருமான உமா பாரதி கூறும்போது, “ஜபல்பூருக்கு அருகிலுள்ள அமர்கண்டக்கில் நர்மதா ஆறு தொடங்கும் இடத்தில் நவம்பர் 7-ம் தேதி எனது போராட்டத்தை தொடங்குகிறேன். இந்த நதிக்கரையில் வழிநெடுகிலும் உள்ள மதுக்கடைகள் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவேன். இரவில் நதிக்கரையில் ஓலைக்குடிசை அமைத்து தங்குவேன். அடுத்த ஆண்டு ஜனவரி 14 வரை எனது போராட்டம் தொடரும். அதுவரை வீட்டுக்கு செல்ல மாட்டேன்” என அறிவித்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய ஆட்சியில் 2017 வரை நீர்வளத் துறை அமைச்சராகவும் இருந்தார் உமா பாரதி. இவரை ம.பி.யின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி 2003 தேர்தலில்
பாஜக ஆட்சியை பிடித்தது. இதனால், முதல்வராக அமர்ந்தவர் மீது 2004-ல் கர்நாடகாவின் ஹுப்ளியில் பதிவான ஒரு வழக்கில் அவருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக பதவியிறக்கப்பட்ட உமா பாரதிக்கு பதிலாக சிவராஜ் சிங் சவுகான் முதல்வரானார். தற்போது சவுகான் மீது பாஜக தலைமை அதிருப்தியில் உள்ளது. இதை பயன்படுத்தி மீண்டும் ஆட்சியில் அமர உமா பாரதி முயற்சிப்பதாக பேச்சு எழுந்துள்ளது.