ஆந்திர மாநில பகுதி பாலாற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவனும் மாயம்!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக ஆந்திர எல்லையான புல்லூர் பகுதியில் ஆந்திரா அரசால் கட்டப்பட்ட தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணை பருவ மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த தடுப்பணையில் ஆந்திரா, கர்நாடகா, தமிழக பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் சுற்றுலாவுக்காகவும் அருகில் உள்ள கோயிலுக்கு வழிபடவும் வருகை புரிகின்றனர்.
இந்நிலையில் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகரை சேர்ந்த ராகில் பைசல், உசேன் அஹமத், இலியாஸ் அஹமத் உட்பட நான்கு பேர் குளிக்கச் சென்றுள்ளனர். தடுப்பு அணையில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது காற்றாற்று வெள்ளம் வரும் பகுதியில் பள்ளி மாணவர் உசேன் அஹமத் நீரில் மூழ்கியுள்ளார். அவரைக் காப்பாற்ற சென்ற அவரது நண்பர் இலியாஸ் அகமது காப்பாற்ற முயன்ற பொழுது அவரும் நீரில் மூழ்கியுள்ளார்.
இருவரும் நீரில் மூழ்கி நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் இதனால் அதிர்ச்சியடைந்த ராகில் பைசல் அருகில் இருந்தவர்களை உதவிக்காக அழைத்துள்ளார். அருகில் இருந்தவர்கள் நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால் தமிழக-ஆந்திர எல்லை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தமிழக போலீசார் பொதுமக்கள் உதவியுடன் தகப்பு அணையில் இருவரையும் தேடி வருகின்றனர். ஆனால் ஆந்திர எல்லைக்குட்பட்ட பகுதியாக இருந்தும் அந்த மாநில காவல் துறையினர் வந்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.