சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் தி.மு.க பொதுக்குழு கூட்டம் இன்று காலை நடபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க கட்சியின் தலைவராக மீண்டும் ஸ்டாலின் ஒருமனதாக போட்டியின்று தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து தி.மு.க துணைப் பொதுச்செயலாளராக கனிமொழியை நியமனம் செய்து ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். மேலும், ராசா, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீண்டும் துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், “இரண்டாவது முறையாக தி.மு.க-வின் தலைவராக பொறுப்பேற்று இருக்கிறேன். அதற்கான வாய்ப்பு வழங்கிய உங்கள் அனைவரையும் வணங்குகிறேன். கழகமே தங்கள் மூச்சும் பேச்சுமாக வாழும் கழக உடன்பிறப்புகளுக்கு, என்றென்றும் உண்மையாக இருப்பேன் என உறுதிமொழி அளிக்கிறேன். கழகத்தின் உறுப்பினர் அட்டை வைத்திருக்கக்கூடிய ஒவ்வொரு உறுப்பினரும் மதிப்பிற்குரியவர்கள். மரியாதைக்குரியவர்கள்.
கொள்கை பலமும் அதை அடைவதற்கான தொண்டர்களும் நமது கழகத்தில் இருப்பதினால் தான், கட்சி தொடங்கிய போது இருந்த அதே சுறுசுறுப்போடு எழுபது ஆண்டுகளைத் தொடர்ந்தும் இன்று வரை இயங்கிக் கொண்டிருக்கிறது. அறிஞர் அண்ணாவிற்கு பிறகு, கலைஞருக்கு பிறகு இந்த கட்சியின் பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டது. இந்த பொறுப்பை நான் என்னை நம்பி அல்ல உங்களை நம்பித்தான் ஏற்றிருக்கிறேன். அன்றிலிருந்து இன்று வரை நமக்கு ஏறுமுகம் தான். கிராமப்புற ஊராட்சி தேர்தலில், நாடாளுமன்ற தேர்தலில், சட்டமன்ற தேர்தலில் வெற்றி, என இந்த மூன்று ஆண்டுகள் என்பது திராவிட கழகத்திற்கு முன்னேற்றக் காலம் என்பதை இன்று வரை நிரூபித்து வருகிறோம்.
அதேபோல தான், இப்பொழுதும் பொறுப்பேற்றிருக்கிறேன். நான் உங்களுக்கு பணியாற்ற உத்தரவிடப்பட்டிருக்கிறேன். மூன்று ஆண்டுகளாக முறைப்படி கழகத்தின் தேர்தலை நடத்தியிருக்கிறோம். கழகத்தின் பல பொறுப்புகளுக்கு போட்டி இருந்தது உண்மைதான். அது பதவிக்காக அல்ல, மக்களுக்காக உழைப்பதற்கு போட்டி போடுகிறார்கள் என்ற வகையில் எனக்கு பெருமையாக இருந்தது.
தி.மு.க பழுத்த மரம் என்பதால் தான் கல் எரிகிறார்கள். கழகம் மரம் மட்டுமல்ல கல் கோட்டை. தி.மு.க உறுப்பினர்கள் பலர் புதிய பொறுப்புகளுக்கு வந்திருக்கிறீர்கள். நான் தகுதியானவன் என்பதால் இந்த பொறுப்புக்கு வந்து விட்டேன் என யாரும் எண்ண வேண்டாம். காலம் உங்களுக்கு பணி செய்வதற்கு ஒரு கொடை வழங்கியிருக்கிறது.
நம்மைப் போன்ற லட்சக்கணக்கான தொண்டர்கள் நமக்கு தோளோடு தோள் சேர்ந்து களப்பணியாற்ற காத்திருக்கிறார்கள். எனவே நமது பொறுப்பை, கடமை உணர்ந்து செயல்பட வேண்டும். இந்த பொறுப்பை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் பொறுப்புகள் தொடரும் என்பதை மறந்து விட வேண்டாம்” எனப் பேசியிருக்கிறார்.