மீண்டும் குடியிருப்பு பகுதியில் உலா வரும் பாகுபலி காட்டு யானை!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் பாகுபலி காட்டு யானையின் நடமாட்டம் மீண்டும் துவங்கியுள்ளது. யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஓராண்டுக்கு மேலாக மேட்டுப்பாளையம் சுற்றுலா வட்டார பகுதிகளில் முகாமிட்டு குடியிருப்பு பகுதிகளை உலா வருகிறது பாகுபலி என்ற ஒற்றை யானை. விவசாய பயிர்களை சேதப்படுத்துவதும் குடியிருப்பு பகுதியில் உலா வருவதுமாக சுற்றி வருகிறது. வனத்துறையினரின் பல்வேறு முயற்சிகளை முறியடித்து வனத்துறையினருக்கு சவாலாக விளங்கி வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு மூன்று கும்கி யானைகளை வரவழைத்து பாகுபலி யானையை சுற்றி வளைக்க முயன்றனர். ஆனால் அவர்களின் பிடியில் சிக்காமல் தந்திரமாக காட்டுப்பகுதிக்கு தப்பி சென்றது. சில மாதமாக யார் கண்ணிலும் படாமல் இருந்த யானை தற்பொழுது மீண்டும் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் சுற்றிவர ஆரம்பித்துள்ளது.
நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை சமயபுரம் எனும் இடத்தில் சாலையைக் கடந்து வீடுகள் இருக்கும் குடியிருப்பு பகுதிக்கு சென்றது. இதனால் வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க தொடங்கியுள்ளனர். யானை மீண்டும் உலா வருவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். பாகுபலி ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.