புதுடெல்லி: ரயில்வே வேலைக்கு நிலங்களை லஞ்சமாக பெற்ற வழக்கில் பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி, ரயில்வே முன்னாள் உயரதிகாரிகள் இருவர் உள்ளிட்ட 16 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009 வரை, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது ரயில்வேயில் குரூப்-டி பணிகளை வாங்கித் தந்ததற்கு பலரின் நிலங்களை லாலுவும் அவரது குடும்பத்தினரும் லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ கடந்த 2021 செப்டம்பர் முதல் முதற்கட்ட விசாரணை நடத்தியது. இதில் லாலு உள்ளிட்ட 16 பேர் மீது கடந்த மே 18-ம் தேதி வழக்கு பதிவு செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ நேற்று முன்தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் லாலு, அவரது மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி, ரயில்வே துறையின் முன்னாள் பொதுமேலாளர் சவும்யா ராகவன், முன்னாள் தலைமை பணியாளர் அதிகாரி கமல்தீப் மெயின்ராஜ், வேலைவாய்ப்பு பெற்ற 7 இளை ஞர்கள் மற்றும் 4 பேர் என மொத்தம் 16 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:
விண்ணப்பதாரர் அல்லது அவரது நெருங்கிய உறவினர் பெயரில் உள்ள நிலங்களை சந்தை விலையை விட மிகவும் குறைந்த விலைக்கு வாங்கிக் கொண்டு வேலைவாய்ப்பு வழங் கியது விசாரணையில் தெரிய வந்தது. விண்ணப்பதாரர்கள் பொய் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை ரயில்வேயில் சமர்ப்பித்துள்ளனர். ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் மாற் றுப் பணியாளராக இவர்கள் நியமனம் பெற்றுள்ளனர். இந்த நியமனம் தொடர்பாக விளம்பரம் அல்லது பொது அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
பாட்னாவில் 1,05,292 சதுர அடி நிலத்தை 5 விற்பனை பத்திரங்கள் மற்றும் 2 தான பத்திரங்கள் மூலம் லாலுவின் குடும்பத்தினர் பெற்றுள்ளனர். பெரும்பாலான நிலப் பரிவர்த்தனையில் விற்பனை யாளருக்கு பணம் ரொக்கமாக தரப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மருத்துவ சிகிச்சைக்காக அக்டோபர் 25 வரை லாலு வெளிநாடு சென்று வர டெல்லி நீதிமன்றம் கடந்த வாரம் அனுமதி வழங்கியது. இதையடுத்து லாலு நாளை (அக்.10) சிங்கப்பூர் செல்ல
விருக்கும் நிலையில் இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டுள்ளது.